Published : 08 May 2024 12:21 PM
Last Updated : 08 May 2024 12:21 PM

கடலில் 3,000 கி.மீ. பயணித்து ஈரானில் இருந்து தப்பி படகில் கேரளா வந்த தமிழக மீனவர்கள்!

அரபிக் கடலில் தமிழக மீனவர்களை படகுடன் மீட்ட இந்திய கடலோரக் காவல்படை ரோந்து கப்பல்கள். (வலது) இந்திய கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்ட 6 தமிழக மீனவர்கள்.

ராமேசுவரம்: ஈரான் நாட்டிலிருந்து தப்பி 3 ஆயிரம் கி.மீ. கடல் பயணமாக மீன்பிடி படகில் கேரள கடற் பகுதிக்கு வந்த தமிழக மீனவர்கள் 6 பேரை கடலோரக்காவல் படையினர் மீட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி நித்திய தயாளன் (30), அருண் தயாளன் (27), கலைதாஸ் (45), வாலாந்தரவை ராஜேந்திரன் (30), பாசிப்பட்டினம் முனீஸ்வரன் (37), கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மரியடேனியல் (38) ஆகிய 6 பேரும் கடந்த 26.03.2023 அன்று ஈரான் நாட்டுக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாக மீன் பிடிக்கச் சென்றனர். ஈரானில் செய்யது சவூத் ஜாஃரி என்பவர் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் கொத்தடிமையாக நடத்தியுள்ளார்.

இதையடுத்து 15 நாட்களுக்கு முன்னர் இந்த 6 மீனவர்களும், செய்யது சவூத் ஜாஃரியின் மீன்பிடி படகு மூலம் ஈரானிலிருந்து புறப்பட்டு அரபிக் கடல் வழியாக கடந்த 5-ம் தேதி கேரள மாநில கடற்பகுதிக்கு வந்தனர். அப்போது படகில் டீசல் முழுமையாகத் தீர்ந்து விட்டது. இதனால், நடுக் கடலில் தத்தளித்த 6 மீனவர்களும் தங்கள் உறவினர்களைத் தொடர்பு கொண்டு டீசல் இன்றி கடலில் தவிப்பதாகத் தெரிவித்தனர்.

இது குறித்து தகவலறிந்த தமிழக மீனவ அமைப்புகள் இந்திய கடலோரக் காவல் படையினரிடம், அரபிக் கடலில் டீசல் இன்றி தவிக்கும் மீனவர்கள் குறித்தும், அவர்களை மீட்கும்படியும் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து கடலோரக் காவல் படையினர் இரண்டு ரோந்து கப்பல்களில் சென்று, நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை படகுடன் மீட்டு கொச்சி கடற்படை முகாமுக்குக் கொண்டு வந்தனர்.

அங்கு கொச்சி காவல் துறையினரின் விசாரணைக்குப் பின்னர் வழக்குப் பதிவு செய்யாமல் மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதில், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 5 பேர் கொச்சியிலிருந்து ரயில் மூலம் மதுரை வந்து அங்கிருந்து நேற்றிரவு ராமநாதபுரத்தை வந்தடைந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x