Published : 08 May 2024 05:19 AM
Last Updated : 08 May 2024 05:19 AM
சென்னை: ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்டவற்றுக்கான முத்திரைக் கட்டணத்தை தமிழக பதிவுத்துறை பல மடங்காக உயர்த்தியுள்ளது.
கடந்தாண்டு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சட்டமுன்வடிவு அடிப்படையில், பிரமாணப்பத்திரம், ஒப்பந்தம், பொது அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கான முத்திரைக் கட்டணத்தை தமிழக அரசு பலமடங்கு உயர்த்தியுள்ளது. மேலும் இந்திய முத்திரைச் சட்டத்தில் தமிழகத்துக்கு திருத்தங்களையும் செய்துள்ளது. இந்த திருத்தங்கள் கடந்த மே 3 முதல்அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பான அறிவிக்கை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், தத்தெடுத்தலுக்கு முன்பிருந்த ரூ.100 முத்திரைக் கட்டணமானது ரூ.1000ஆகவும், பிரமாணப்பத்திரம், உடன்படிக்கை ஆகியவற்றுக்கு முத்திரைக் கட்டணம் ரூ.20 என்பது ரூ.200ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சங்கம் பதிவுக்கான முத்திரைக் கட்டணம் ரூ.300 லிருந்துஒவ்வொரு ரூ.10 லட்சத்துக்கும் ரூ.500 என்றும், கிரையபத்திரம் ரத்துக்கு ரூ.50 ஆக இருந்த கட்டணம் ரூ.1000 ஆகவும், நகல் பத்திரத்துக்கு ரூ.20 ஆக இருந்த கட்டணம் ரூ.100 ஆகவும், பிரதி எடுத்தலுக்கு ரூ.25 ஆக இருந்த கட்டணம் ரூ.500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், ஒருவர் தான் மற்றொருவரிடம் வாங்கிய சொத்தை அவருக்கே திருப்பியளிப்பதாக இருந்தால், அது கிரைய பத்திரமாக கருதப்பட்டு வழிகாட்டி மதிப்பில் 7 சதவீத கட்டணம், 2 சதவீதம் பதிவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போதுரூ.1000-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சங்கத்துக்கான ஒப்பந்த பதிவுக்கு ரூ. 200 அல்லது ரூ.500 என இருந்த கட்டணம் ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் அல்லாத பாகப்பிரிவினைக்கு ஒவ்வொரு பாகத்துக்கும் 4 சதவீதம் என்பது, ஒவ்வொருபாகத்துக்குமான சந்தை மதிப்பில் 4 சதவீதம் என திருத்தப்பட்டுள்ளது.
அதேபோல் ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு பாகப் பிரிவினை செய்யும்போது, அதில்ஒருவர் உயிருடன் இல்லாத பட்சத்தில் அவரது சட்டப்படியான வாரிசுகள், முன்பு குடும்பத்தினர் அல்லாதவராக கருதப்படுவர். ஆனால், தற்போது புதிய திருத்தத்தில், அந்த சட்டப்படியான வாரிசுகளும் குடும்ப அங்கத்தினராக கொண்டு வரப்பட்டுள்ளனர்.
மேலும் பங்குதாரர் பதிவுக்கான கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ.1000-ஆக உயர்ந்துள்ளது. மேலும், பொது அதிகார பத்திரத்தை பொறுத்தவரை, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துகளை ஒரே பதிவில் வாங்குவதற்காக வழங்கப்படும் சிறப்பு பொது அதிகாரம், ஒரு நபர்அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு பதிவுக்கு மட்டும் வழங்கப்படும் சிறப்பு பொது அதிகாரத்துக்கு ரூ.5 ஆக இருந்த கட்டணம் ரூ.500 ஆனது.
மேலும், 5 நபர்களுக்கு இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ செயல்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு வழங்கப்படும் பொது அதிகாரப் பத்திரத்துக்கு முன்பு ரூ.100 முத்திரைக் கட்டணம் இருந்த நிலையில் அது ரூ.1000 ஆகவும், 5-க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பொது அதிகாரத்துக்கு ரூ.175-லிருந்து ரூ.1000 ஆகவும் முத்திரைக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அசையா சொத்துக்கள் விற்பனைக்கு வழங்கப்படும் பொது அதிகாரத்துக்கு சொத்தின் சந்தைமதிப்பில் 4 சதவீதம் என முத்திரைக் கட்டணம் திருத்தப்பட்டுள்ளது. அசையா சொத்து விற்பனைக்காக குடும்ப உறுப்பினருக்கு வழங்கப்படும் பொது அதிகாரத்துக்குமுத்திரைக் கட்டணம் ரூ.1000 எனவும், குடும்பத்தினர் அல்லாதவராக இருந்தால் சொத்தின் சந்தை மதிப்பில் 1 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சொத்து அடமானத்தை திரும்ப பெறுவதற்கான முத்திரைக் கட்டணம் ரூ.80-லிருந்து ரூ.1000 ஆகவும், பிணை பத்திரத்துக்கு ரூ.80-லிருந்து ரூ.500 ஆகவும், செட்டில்மென்ட் திரும்ப பெறுவதற்கு ரூ.80-லிருந்து ரூ.1000 ஆகவும், குத்தகையை ஒப்படைப்பதற்கான முத்திரைக் கட்டணம் ரூ.40 லிருந்து ரூ.1000 ஆகவும் உயர்த்தப்படுகிறது.
மேலும் அறக்கட்டளையின் ஒரு அறங்காவலரிடம் இருந்து மற்றொரு அறங்காவலர் அல்லது அதே அறக்கட்டளையின் ஒரு பயனாளருக்கு உரிமை மாற்றம் செய்யும் போது ரூ.30 ஆக இருந்தமுத்திரைக் கட்டணம் ரூ.1000 ஆகவும், அறக்கட்டளை உருவாக்கத்துக்கு ரூ.180 ஆக இருந்த முத்திரைக் கட்டணம் ரூ.1000 ஆகவும், அறக்கட்டளை கலைத்தலுக்கான முத்திரைக் கட்டணம் ரூ.120 லிருந்துரூ.1000 ஆகவும் உயர்த்தப்பட்டது.
கட்டண உயர்வுக்கு ஓபிஎஸ், கட்டுமான துறை எதிர்ப்பு: முத்திரை மற்றும் பதிவுக் கட்டணத்தை அநியாயமாக, ஒரே ஆண்டில் இரண்டு மடங்கு உயர்த்தி இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது, என்ன வழிகாட்டி மதிப்பு இருந்ததோ அதே மதிப்பை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பொது அதிகாரத்துக்கான கட்டண உயர்வு குறித்து இந்திய கட்டுநர் சங்கத்தின் நகராட்சி மற்றும் டிடிசிபி குழு தலைவர் எஸ்.ராமபிரபு கூறும்போது, ‘‘இந்த கட்டண உயர்வால் வீடு வாங்குவோரின் சுமை அதிகரிக்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT