Published : 08 May 2024 06:06 AM
Last Updated : 08 May 2024 06:06 AM
சென்னை: காமராஜரின் நினைவிடம் இடுகாடுபோல் பராமரிப்பின்றி இருந்து வருவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள காமராஜர் நினைவிடம் சரியாக பராமரிக்கப்படாமலும், மின் விளக்குகள் அமைக்கப்படாமலும் இருந்து வருவதாக கட்சி நிர்வாகிகள் வருத்தம் தெரிவித்த நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னையில் உள்ள காமராஜரின் நினைவிடம் பராமரிப்பின்றி இருந்து வருவதாக பொதுமக்களும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் தொடர்ந்து வேதனை தெரிவித்து வருகின்றனர்.
காமராஜரின் நினைவிடம் சரியான முறையில் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். ஆனால் இன்றைக்கு இருக்கும் பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு காமராஜரின் அருமை தெரியவில்லை. அவரது பெருமையையும் புரியவில்லை.
எதற்காக இப்படி இடுகாடுபோல் காமராஜர் நினைவிடத்தை வைத்திருக்கின்றனர்? எங்கு பார்த்தாலும் குப்பை, புல்லும், புதருமாக இருக்கிறது. குடிப்பதற்குக் கூட தண்ணீர் இல்லை. வெளி வாகனங்கள் தினமும் வளாகத்தின் உள்ளேநிறுத்தப்படுகின்றன. காமராஜர் என்ன பெரிய தவறு செய்துவிட்டார்? எதற்காக அவரது நினைவிடம் இவ்வாறு பராமரிப்பு இன்றி இருக்கிறது?
எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், ஓரிரு மாதங்களில் முறையாக பராமரித்து குறைந்தபட்சம் மறைந்த முன்னாள்முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை போன்றாவது, காமராஜர்நினைவிடத்தை பொதுப்பணித்துறையினர் பராமரிக்க வலியுறுத்தியும், பொதுப்பணித் துறை அமைச்சரிடமும் புகார் அளிக்க உள்ளோம்.
திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கட்சி ரீதியாக முன்னாள் மாநிலதலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, கே.எஸ்.அழகிரி ஆகியோருடன் கலந்து பேசி வருகிறோம்.
இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையின் விசாரணையும் துரிதமாக செல்கிறது.தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. காவல் துறையின் விசாரணையை மட்டுமே இதில் நம்பியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT