Published : 07 May 2024 12:04 PM
Last Updated : 07 May 2024 12:04 PM
உதகை: யானைகள் வழித்தட விரிவாக்கம் தொடர்பாக வனத்துறை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பால் 7 வருவாய் கிராமங்களில் 34,796 வீடுகள் பாதிக்கப்படும் சூழல் நிலவுவதாக, நீலகிரி ஆட்சியரிடம் மதச்சார்பற்ற கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் யானை வழித்தட விரிவாக்க நடவடிக்கை எதிர்ப்புக் குழு சார்பில் திமுக கூடலூர் நகர செயலாளர் இளஞ்செழியன், கோபிநாத் (காங்கிரஸ்), என்.வாசு (மா.கம்யூ), சகாதேவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), கே.ஹனீபா (முஸ்லிம் லீக்) ஆகியோர் நீலகிரி ஆட்சியர் மு. அருணாவிடம், கோரிக்கை மனு அளித்தனர்.
அதன்பின் அவர்கள் கூறியதாவது: நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் வசிக்கும் மக்களுக்கு தனியார் வனப் பாதுகாப்புச் சட்டம், வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாத பிரச்சினை, வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளிட்ட ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. இந்நிலையில், புதிதாக யானைகள் வழித்தடம் விரிவாக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கூடலூர், ஓவேலி, முது மலை ஆகிய வனச்சரக அலுவலகங்களுக்கு உட்பட்ட 31 கிராமங்களில் 2,547 வீடுகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. 7 வருவாய் கிராமங்களில் 34,796 வீடுகள், யானைகள் வழித் தடத்தில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி வனத்துறையினரால் யானைகள் வழித்தட விரிவாக்கம் குறித்து புதிதாக அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. இதன் மீது ஏதாவது கருத்து தெரிவிக்க விரும்பினால், மே 5-ம் தேதிக்குள் மின் அஞ்சல் மூலம் அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த உத்தரவு, கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வசிக்கும் கல்வியறிவு இல்லாத மக்களுக்கும், கூலித் தொழிலாளர்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஆகவே யாரும் கருத்து கூறவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட காலக் கட்டத்தில் எந்த அரசு அலுவலகமும் செயல்படாத நிலையில், வனத்துறை அதிகாரிகள் எப்படி இது போன்ற ஒரு உத்தரவை வெளியிட்டு கருத்து கேட்க முடியும் என்பது புரியவில்லை. ஆகவே, வனத்துறையின் உத்தரவை ரத்து செய்து, மக்கள் குழுவின் கருத்து கேட்ட பிறகே யானைகள் வழித்தட விரிவாக்கம் தொடர்பாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT