Published : 07 May 2024 09:06 AM
Last Updated : 07 May 2024 09:06 AM
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் உடனடியாகச் சரி செய்ய 60 சிறப்பு நிலை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
சென்னை, அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் இயங்கி வரும் மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் கூறியதாவது: மாநிலத்தின் மின்சாரத் தேவை மற்றும் மின் விநியோகத்தில் எவ்வித இடைவெளியும் இல்லை. மாநிலம் முழுவதும் தடையில்லா, சீரான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், கோடை காலத்தில், மின்சார விநியோக பாதையில் உள்ள மின் மாற்றிகள், புதைவட கம்பிகள் மற்றும் மின் கம்பிகளில் அவ்வப் போது ஏற்படும் பழுதுகள் காரணமாக ஏற்படும் மின் தடைகள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு தடையில்லா, சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின்னுற்பத்தி நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து தினமும் கண்காணித்து வருகிறோம். மேலும், தேவைப்பட்டால் சொந்த உற்பத்தியைத் தவிர, வெளிச் சந்தையில் இருந்தும் மின்சாரம் வாங்கப்படுகிறது.
இதன் மூலம், கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இரவு நேரங்களில் மின் விநியோகப் பாதையில் உள்ள மின் மாற்றிகள், புதைவட கம்பிகள் மற்றும் மின் கம்பிகளில் அவ்வப்போது ஏற்படும் பழுதுகளை உடனடியாகச் சரி செய்யும் பொருட்டு, 60 சிறப்பு நிலை குழுக்கள் அமைக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் இரவு நேரங்களில் விவசாய மின் இணைப்புகளின் பயன்பாடு அதிகமாக உள்ள காரணத்தால், ஒரு சில பகுதிகளில் உள்ள உயரழுத்த மின் பாதைகளில் சில இடையூறுகள் அவ்வப்போது ஏற்படுகிறது. இத்தகைய இடையூறுகளை நிவர்த்தி செய்வதற்காக, போர்க் கால அடிப்படையில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தொடர்ச்சியாக மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி அதற்கான காரணத்தைக் கண்டறிந்து உடனுக்குடன் சரி செய்யுமாறும், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தலைமைச் செயலாளர் கூறினார். இந்த ஆய்வின் போது, மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, எரிசக்தித் துறை செயலாளர் பீலா வெங்கடேசன், இணை மேலாண்மை இயக்குநர் ( நிதி ) விஷு மஹாஜன், இயக்குநர்கள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT