Published : 23 Apr 2018 09:01 AM
Last Updated : 23 Apr 2018 09:01 AM
கொள்ளை, திருட்டு சம்பவங்களைத் தடுக்க, குடும்பத்துடன் வெளியூர் செல்பவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துவிட்டு செல்லு மாறு பொது மக்களுக்கு காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் அறிவுரை வழங்கியுள்ளார்.
பள்ளிகளுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று வருகிறார்கள். மேலும் சிலர் சுற்றுலா தலங்களுக்கு செல்கிறார்கள். இதனால் ரயில், பேருந்துகளில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக உள்ளது.
விடுமுறைக்காக பலரும் வீட்டைப் பூட்டிக்கொண்டு ஊருக்கு செல்லும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் வீடு புகுந்து திருட்டு மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க வெளியூர் செல்லும் பொதுமக்கள் அதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து விட்டு செல்லுமாறு பொது மக்களுக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் உள்ள 135 காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வெளியூர் செல்வது குறித்து நேரில் வந்து தகவல் தெரிவித்தால் சம்பந்தப்பட்டவர்களின் வீட்டு முகவரியை குறித்து வைத்துக்கொண்டு அந்த வீட்டுக்கு காலை, மதியம், இரவு என ரோந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட துணை ஆணையர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூடுதல் காவல் ஆணையர்கள் எச்.எம்.ஜெயராம், எம்.சி.சாரங்கன் ஆகியோர் கூறும்போது, “சென்னையில் குற்ற சம்பவங்களை முற்றிலும் கட்டுப்படுத்த காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதற்கேற்ப பாதுகாப்பு வியூகங்களை அவ்வப்போது மாற்றி வருகிறோம்” என்றனர்.
வெளியூர் செல்லும் பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவித்தால் ரோந்து போலீஸார் சுழற்சி முறையில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளை கண்காணிப்பார்கள்.
தாங்கள் வந்து செல்வதற்கு அடையாளமாக நோட்டு ஒன்றை அங்கு வைத்து அதில் எந்த நேரம், எந்த தேதியில் வந்தோம் என்பதை குறித்து வைத்து விட்டு செல்வார்கள்.
அப்படி குறித்து வைக்கவில்லை என்றால் அதுகுறித்து காவல் ஆணையரிடம் புகார் தெரிவிக்கலாம். வெளியூர் செல்பவர்கள் தெரிவித்து விட்டு செல்லும்போது சம்பந்தப்பட்ட வீட்டுக்கு ரோந்து செல்லாத போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT