Published : 06 May 2024 06:40 PM
Last Updated : 06 May 2024 06:40 PM
கோவை: “கோவை மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஆட்சியரிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார்.
கோவை மாவட்டத்தில் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் அதிகரித்து வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியை நேரில் சந்தித்து மனு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சசர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், “கோவை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் கடுமையான குடிநீர் பிரச்சினை நிலவுகிறது.
அதிமுக ஆட்சியில் குடிநீர் பிரச்சினை ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குளங்கள் , அணைகள் தூர்வாரப்பட்டன. நீர் மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்தபட்டது. ஆனால், தற்போது நீர்மேலாண்மையே இல்லை. குறிப்பாக பில்லூர், சிறுவாணி, ஆழியார் அணை ஆகியவை முக்கிய குடிநீர் ஆதாரங்களாக உள்ளன. இவை தூர்வாரப்படவில்லை.
புதிய ஆழ்குழாய் கிணறுகள் கூட அமைக்கப்படுவதில்லை. குடிநீர் பிரச்சினை ஏற்படும்போது லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளோம். தற்போது கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக 20 நாட்கள் வரை பல இடங்களில் குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லை.
அதேபோல் மாநகராட்சி சார்பில் முறையாக குப்பைகள் அகற்றப்படுவதில்லை. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை இந்த அரசு கண்டு கொள்ளவில்லை. கோவை எஸ்ஐஎச்எஸ் பாலம் கட்டுமானப் பணிகள் விரைத்து முடிக்க வேண்டும். பொதுக் கழிப்பிடங்கள் சுத்தம் செய்யப்படுவதில்லை. போர்வெல் அமைக்க விண்ணப்பித்தால் அனுமதி வழங்க வேண்டும். சாலைகள் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன. அவற்றை சீரமைக்க வேண்டும்.
இக்கோரிக்கைகள் குறித்து ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம். தென்னை விவசாயிகள் லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றுகின்றனர். அத்தகைய நடவடிக்கைகளை அதிகாரிகள் தடுக்கின்றனர். பல இடங்களில் மண் எடுக்க அனுமதிப்பதில்லை. மாவட்ட நிர்வகம் முழுமையாக இயங்குவதில்லை. மக்கள் நலன் கருதி குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT