Published : 06 May 2024 02:35 PM
Last Updated : 06 May 2024 02:35 PM

104 மற்றும் 14416 - தேர்ச்சி பெறாத பிளஸ் 2 மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குகிறது தமிழக அரசு

சென்னை டிஎம்எஸ் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மனநல ஆலோசனை மையம்

சென்னை: 2023-2024 ஆம் ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், மன நல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இச்சேவையானது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ‘104’ - தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம் மற்றும் ‘14416’ - நட்புடன் உங்களோடு மனநல சேவை மையம் சார்பில் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘104’ - தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம் மற்றும் ‘14416’ - நட்புடன் உங்களோடு மனநல சேவை மையங்கள் 24 மணி நேரமும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. 104 மருத்துவ உதவி மற்றும் தகவல் மையம் வாயிலாக பொதுமக்களுக்கு உடல் நலம் குறித்த அறிவுரைகள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மன நல ஆலோசனைகள் தேவைப்படும் பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றன. அதேபோன்று 14416 அழைப்பு மையம் (நட்புடன் உங்களோடு மன நல சேவை) மன அழுத்தத்தில் இருந்து விடுபெற்று மனநல ஆலோசனை பெறுவதற்காக உருவாக்கப்பட்டது.

தமிழக அரசின் முன்னோடி திட்டத்தின் ஒரு பகுதியாக 2020-2021 மற்றும் 2021-2022 கல்வியாண்டுகளில் நீட் தேர்வுக்கு பதிவு செய்த மாணவர்களுக்கு. 104 மருத்துவ உதவி தகவல் மையம் மூலம் 2020-2021 கல்வியாண்டில் 1,10,971, நீட் தேர்வு பதிவு செய்த மாணவர்கள் மற்றும் 2021-2022 கல்வியாண்டில் 1,45,988 நீட் தேர்வு பதிவு செய்த மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு ‘14416’- நட்புடன் உங்களோடு மன நல சேவை மையம் தொடங்கப்பட்டது.

2022-2023, கல்வியாண்டில், 12 - ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மன நல ஆலோசனை சேவைகள் வழங்கும் செயல்முறையை தமிழக அரசு செயல்படுத்தியது. இதனடிப்படையில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களாக அறிவிக்கப்பட்ட மொத்தம் 46,932 மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டது. இவர்களில் 146 மாணவர்கள் (82 ஆண்கள் மற்றும் 64 பெண்கள்) அதிக மன அழுத்தம் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டு அவர்களின் மன நலம் கருதி தொடர் அழைப்புகள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது.

அவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபெறுவதற்காக மாவட்ட மனநல உளவியலாளர்களிடம் முன்னுரிமை அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு அவர்கள் மூலமும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.மேலும் 2022-2023 கல்வியாண்டில் நீட் தேர்வு எழுதி குறைந்த குறியீட்டு மதிப்பெண்கள் பெற்ற 65,823 மாணவர்களுக்கு ‘104’ - தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம் மற்றும் ‘14416’ - நட்புடன் உங்களோடு மனநல சேவை மையங்கள் மூலம் மன நல ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்தாண்டு (2023-2024) 7,60,606 மாணவர்கள் 12 - ஆம் வகுப்பு வாரியத் தேர்வு எழுதியுள்ளனர். தமிழக பள்ளிக் கல்வித் துறை மூலம் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 7,60,606 மாணவர்களில் தேர்ச்சி பெறாத 51,919 மாணவர்கள் (32164 ஆண்கள் மற்றும் 19755 பெண்கள்) என பெறப்பட்ட பட்டியலிட்ட மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்படவுள்ளது. இச்சேவையானது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை ‘104’ - தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம் மற்றும் ‘14416’ - நட்புடன் உங்களோடு மனநல சேவை மையம், சுகாதாரத் துறை மூலம் 30 இருக்கைகள் கொண்ட 100 மன நல ஆலோசகர்களைக் கொண்டு ஆலோசனை வழங்கப்படும். 30 மன நல ஆலோசகர்கள் 3 சுழற்சிமுறையில் செயல்படுவர்.

‘104’ - தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம் 10 இருக்கைகளுடன் டி.எம்.எஸ் வளாகம் 30 மன நல ஆலோசகர்களைக் கொண்டும், ‘14416’ - நட்புடன் உங்களோடு மனநல சேவை மையமானது 10 இருக்கைகளுடன் மன நல ஆலோசகர்கள், 4 மருத்துவ உளவியல் ஆலோசகர்கள் மற்றும் 1 மன நல மருத்துவரைக் கொண்டு செயல்படுகிறது. ‘14416’ - நட்புடன் உங்களோடு மனநல இரண்டாம் சேவை மையமானது அரசு மன நல மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், சென்னையில் 10 இருக்கைகளுடன் 30 மனநல ஆலோசகர்கள், 3 மருத்துவ உளவியல் ஆலோசகர்கள், மற்றும் 1 மன நல மருத்துவரைக் கொண்டு செயல்படுகிறது.

மேலும் அதிக மன அழுத்தம் உள்ளவர்களாக அடையாளம் காணப்படும் மாணவர்களை அவர்களின் மன நலம் கருதி தொடர் அழைப்புகள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது. அவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபெறுவதற்காக மாவட்ட மனநல திட்டத்தின் கீழ் மன நல உளவியலாளர்கள், மன நல மருத்துவர் சமூக ஆர்வலர்கள் கொண்ட குழுக்கள் மூலம் முன்னுரிமை அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்திருந்து விடுபெற்று நல்வாழ்வு அமைந்திட ஆலோசனை வழங்கப்படுகிறது.

மனநல ஆலோசனைகளுக்கு மருத்துவ உதவி எண் “104” மற்றும் நட்புடன் உங்களோடு மனநல சேவை எண் “14416” ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x