கோப்புப்படம்
கோப்புப்படம்

7, 8-ம் தேதியில் காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு

Published on

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 7, 8 தேதிகளில் ஒருசில இடங்களிலும், 9-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10, 11 தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

7-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களிலும், 8-ம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 109 டிகிரி, இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 104 டிகிரி, கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும். இன்று வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 87 டிகிரி பாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும். 17 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் தலா 111 டிகிரி, ஈரோட்டில் 110 டிகிரி, வேலூர், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் தலா 108 டிகிரி, திருச்சி, திருத்தணி ஆகிய இடங்களில் தலா 107 டிகிரி, சேலம், பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் தலா 106 டிகிரி, தஞ்சாவூர், மதுரை மாநகரம் ஆகிய இடங்களில் தலா 104 டிகிரி, சென்னை மீனம்பாக்கத்தில் 103 டிகிரி, கோவை, தருமபுரி ஆகிய இடங்களில் தலா 101 டிகிரி, கடலூர், நாகப்பட்டினம், பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in