Published : 29 Apr 2018 08:29 AM
Last Updated : 29 Apr 2018 08:29 AM

மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலால் விடிய விடிய சோதனை: கோவையில் ரகசியமாக இயங்கிய ‘குட்கா ஆலை- கோடிக்கணக்கில் போதைப் பொருட்கள் பறிமுதல்?

கோவையில் ரகசியமாக செயல்பட்டுவந்த குட்கா ஆலையில் விடிய விடிய நடந்த சோதனை யில் கோடிக்கணக்கில் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கோவை சூலூர் அருகேயுள்ள கண்ணம்பாளையம் நல்லான் தோட்டம் பகுதியில், டெல்லி யைச் சேர்ந்த ஜெயின் என்பவருக் குச் சொந்தமான சுமார் ஐந்தரை ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த வளாகத்தில் தோட்டம், பங்களா மற்றும் கிடங்குகள் உள்ளன. இங்கு தடை செய்யப்பட்ட போதைப் பொட்களான குட்கா, பான் மசாலா ஆகியவை தயாரிக்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்திக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவரும் கருமத்தம்பட்டி துணைக் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீஸாரும் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர். அங்கு சோதனையிட்டதில், குட்கா, பான்மசாலா ஆகியவை மூட்டை மூட்டையாக இருந்துள்ளன. மேலும், அவற்றைத் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருட்களும் அதிக அளவில் இருந்துள்ளன. இவற்றின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

20 மணி நேரம் சோதனை

மேலும், அந்தப் பகுதியில் போதைப் பொருட்களைப் பதுக்கி வைத்திருக்கலாம் என்றும் சந்தே கம் எழுந்ததால், சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சுமார் 20 மணி நேரத்துக்கும் மேல் சோதனை நடைபெற்ற நிலையில், அப்பகுதிக்குள் நுழைய செய்தியாளர் கள் மற்றும் பொது மக்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கும், போலீஸார் எவ்வித தகவலையும் கூறவில்லை.

இங்கு தயாரிக்கப்படும் போதைப் பொருட்களை வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுதொடர்பாகவும் போலீ ஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சோதனைக்குப் பின்னர் இந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை மற்றும் தடவியல் துறையினர் மூலம், அங்குள்ள பொருட்களை மதிப்பீடு செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தனிப்படை போலீ ஸார் கூறியதாவது: டெல்லியைச் சேர்ந்த ஜெயின் என்பவருக்குச் சொந்தமான இந்த தோட்டம் சுமார் 5.50 ஏக்கர் பரப்பு கொண்டது. ஏறத்தாழ 40 ஆயிரம் சதுர அடி பரப்பில் கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டிடங்களைச் சுற்றிலும் 15 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட் டுள்ளது.

குட்கா தயாரிக்கும் பணியில் உள்ளூர் ஆட்களை ஈடுபடுத்தாமல் ஒடிசா, பிஹார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த பணியாளர்களைப் பயன்படுத்தியுள்ளனர். இந்த வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

மேலும், அவர்களை வெளியில் விடாமலும், அக்கம்பக்கத்தினரு டன் பழக விடாமலும் தடுத்துள்ளனர். போதைப் பொருட்களைத் தயாரிப்பதற்குத் தேவையான மூலப் பொருட்களை இரவு நேரங்களில் ரகசியமாக லாரிகளில் கொண்டு வந்துள்ளனர். மேலும், தயாரிக்கப்பட்ட போதைப் பொருட்களை ரகசியமாக இரவு நேரத்தில் வெளியில் கொண்டுசென்றுள்ளனர். இங்கு போதைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்குவதே அக்கம்பக்கத்தினருக்குத் தெரியவில்லை.

போதைப் பொருட்கள் தயாரிக்கும்போது துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக, வாசனைத் திரவியங்களையும் பயன்படுத்தியுள்ளனர். அங்கிருந்த 4 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். பல ஆண்டுகளாக இந்த ஆலை செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது. எனினும், முழுமை யான விசாரணைக்குப் பின்னரே இந்த ஆலை எத்தனை ஆண்டு கள் செயல்படுகிறது, போதைப் பொருட்களைத் தயாரிப்பது யார், பயன்படுத்தும் இயந்திரங்கள் என்ன, இதன் பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பது போன்ற விவரங்கள் தெரியவரும். அதற்கு பிறகு மேல் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு தனிப்படை போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, 'இந்த இடத்தின் செயல்பாடுகளே மர்மமாக இருக்கும். இங்கு வாசனைப் பாக்கு தயாரிக்கிறார்கள் என்று நாங்கள் கருதியிருந்தோம். இரவு நேரங்களில் லாரிகள் வந்து செல்லும். இவ்வளவு போதைப் பொருட்கள் தயாரிக்கிறார்கள் என்ற செய்தியே எங்களுக்கு அதிர்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக போலீ ஸார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

திமுக போராட்டம்

இதற்கிடையில், சோதனை நடைபெற்ற பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் திரண்ட திமுகவினர், போலீஸார் உண்மையை மறைக்க முயற்சிப்பதாகவும் கைப்பற்றப்பட்ட பொருட்களைக் காண்பிக்குமாறும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், இந்த விவகாரத்தில் அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x