Published : 05 May 2024 10:04 PM
Last Updated : 05 May 2024 10:04 PM
சென்னை: ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் வரும் செவ்வாய்க்கிழமை (மே 7) முதல் இ-பாஸ் பெற வேண்டியது அவசியம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று ‘இ-பாஸ்’ பெறுவதற்கான இணையதள முகவரியை வெளியிட்டது தமிழக அரசு.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. தமிழகத்தில் கோடை காலங்களில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களான ஊட்டி மற்றும் கொடைக்கானலில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இப்படி கோடை காலங்களில் அவர்களின் வருகை அதிகமாக இருப்பதைக் கவனத்தில் கொண்டு, பயணிகளின் வருகையை முறைப்படுத்தும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விவரங்களையும், பயணிக்கும் வாகனங்களின் எண்களையும், அவர்கள் வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து, ‘இ-பாஸ்’ பெற்று, அதன் அடிப்படையில் வாகனங்களும் சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி கோடை விடுமுறையை கழிக்கவும், சுற்றிப் பார்க்கவும் வரும் சுற்றுலாப் பயணிகள் முறையான இ-பாஸ் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்களுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால், அவர்கள் பயணிக்கும் வாகனங்கள் இ-பாஸ் பதிவு செய்து பயணிக்க வேண்டும்.
மேலும், இ-பாஸ் பெறுவதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் ‘epass.tnega.org’ என்ற இணைய முகவரியில் உரிய தகவல்களை தெரிவித்து மே 6, 2024 (திங்கள்கிழமை) காலை 6.00 மணி முதல் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம்.
வெளிநாட்டுப் பயணிகள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். உள்நாட்டுப் பயணிகள் தங்களுடைய தொலைபேசி எண்களை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். அவர்கள் விண்ணப்பிக்கும் போது தானாகவே இ-பாஸ் கிடைத்துவிடும்.
மேலும், இந்த நடைமுறை வாகனங்களை முறைப்படுத்தி சுற்றுலா பயணிகள் எளிதாக வந்து செல்ல வழிவகுக்கும். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இந்த நடைமுறையினை வரும் மே 5, 2024 முதல் ஜூன் 30, 2024 வரை பின்பற்றுவார்கள். இ-பாஸ் வழங்கும் இந்த நடவடிக்கையின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும், அச்சமும் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.
இந்த இ-பாஸ் அனுமதி காரணமாக பொதுமக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்ற விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன என அதில் சொல்லப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT