Published : 05 May 2024 06:53 PM
Last Updated : 05 May 2024 06:53 PM
சேலம்: சேலத்தில் நீட் தேர்வுக்கு, கடைகளில் வாங்கிய குடிநீர் பாட்டிலோடு மாணவர்கள் சிலர் வந்த நிலையில், அந்த பாட்டில்களில் இருந்த விளம்பர ஸ்டிக்கர் முழுவதையும் அகற்றிய பின்னரே, குடிநீர் பாட்டிலை தேர்வுக் கூடத்துக்குள் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது..
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் தீர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. நீட் தேர்வில் பங்கேற்க, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 992 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், நீட் தேர்வுக்காக சேலம் மாநகரில் 18 மையங்கள், புறநகரில் 6 மையங்கள் என மொத்தம் 24 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்களில் நீட் தேர்வினை எழுதுவதற்கு சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் 11,142 பேருக்கு தேர்வுக் கூட அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தேர்வு நாளான இன்று மாணவ, மாணவிகள் பலர் பெற்றோருடன் தேர்வு மையத்துக்கு நண்பகல் 12 மணியில் இருந்து கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். நீட் தேர்வுக்கான கட்டுப்பாடுகளை அறிந்திருந்த மாணவ, மாணவிகள் பலர் நுழைவுச் சீட்டு உள்பட தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டவற்றை மட்டும் உடன் எடுத்துச் சென்றனர். நீட் தேர்வு விதிமுறைகளை அறிந்திருந்த மாணவிகள் பலர், அலங்கார ஆடையின்றி, துப்பட்டா, காதணி உள்பட தடை செய்யப்பட்டவற்றை அணியாமல் தேர்வுக்கு வந்தனர்.
தேர்வு மையங்களில், நீட் தேர்வு ஏற்பாட்டாளர்கள் மாணவி, மாணவிகள் விண்ணப்பம், புகைப்படம் உள்ளிட்டவற்றை சரிபார்த்து அனுப்பினர். மாணவ, மாணவிகள் விதிமுறை சரியாக பின்பற்றி வந்திருந்தால், தேர்வு மையத்தில் அவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை. இதனிடையே, கோடை காலம் என்பதால், மாணவ, மாணவிகள் குடிநீர் பாட்டிலை உடன் எடுத்துச் சென்றனர். அவர்களில் சிலர் உற்பத்தி நிறுவன பெயர் பொறித்த ஸ்டிக்கருடன் கூடிய குடிநீர் பாட்டிலை எடுத்துச் செல்ல முயன்றபோது, தேர்வு மைய ஊழியர்கள், ஸ்டிக்கரை கிழித்து அகற்றிவிட்டு, குடிநீர் பாட்டிலை மாணவர்கள் எடுத்துச் செல்ல அனுமதித்தனர்.
இதேபோல், மாணவிகள் சிலர் பின்னல் சடையுடன் வந்த நிலையில், தேர்வு மையத்துக்கு வந்த பின்னர், தங்களது பெற்றோரைக் கொண்டு, பின்னல் சடையை பிரித்துவிட்டு பின்னர் தேர்வுக்கு சென்றனர். மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிவிட்டு திரும்பும் வரை, அவர்களது பெற்றோர், தேர்வு மையம் அமைந்துள்ள சாலை, வீதி ஆகியவற்றின் ஓரத்தில் வெயிலையும் பொருட்படுத்தாமல் கூட்டம் கூட்டமாக காத்திருந்து, தேர்வு முடிவுற்றதும் மாணவ, மாணவிகளை அழைத்துச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT