Published : 05 May 2024 02:52 PM
Last Updated : 05 May 2024 02:52 PM
கிருஷ்ணகிரி: போலந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும், கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞருக்கும் தமிழ் கலாச்சாரப்படி இன்று திருமணம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகேயுள்ள குரியனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திம்மப்பா, பத்மம்மா தம்பதியின் மகன் ரமேஷ்(33). இவர் தனது பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து போலாந்து நாட்டில் தனது மேற்படிப்பை படிக்க சென்றார். மேற்படிப்பை முடித்த ரமேஷ், அமெரிக்காவில் உள்ள Villanova பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறார்.
போலந்தில் கல்லூரியில் படிக்கும்போது அதே நாட்டை சேர்ந்த ஆடேம் மல்கோர்த்த, டிபிகா தம்பதியரின் மகள் எவலினா மேத்ரோ(30)-வை ரமேஷ் காதலித்து வந்துள்ளார். 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருவரும் தங்களது காதல் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். முதலில் ஏற்க மறுத்த பெற்றோர் பின்னர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ரமேஷ், மேத்ரோ இருவரும் கடந்த மாதம் இந்தியா வந்தனர். பெண்ணின் பெற்றோர் வரமுடியாத நிலையில் இன்று(மே 5) இருவருக்கும் தமிழ் கலாச்சாரப்படி திருமணம் நடைபெற்றது. முன்னதாக நேற்று இரவு நிச்சயதார்த்தம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. விழாவில், ரமேஷின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT