Published : 05 May 2024 05:19 AM
Last Updated : 05 May 2024 05:19 AM
சென்னை: தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 6,115 புத்தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் 2024-25-ம் நிதியாண்டுக்கான நிதி நிலைஅறிக்கையில், “கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு முயற்சிகளின் விளைவாக புத்தொழில் நிறுவனங்கள் (Startups) அமைவதற்கான உகந்த சூழலை உருவாக்குவதில் நாட்டிலேயே தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது பெருமகிழ்ச்சிக்குரியது.
2021-ல் திமுக அரசு பொறுப்பேற்ற நிலையில் தமிழகத்தில் 2,105 புத்தொழில் நிறுவனங்கள் இருந்தன. இந்த 3 ஆண்டுகளாக இந்த அரசு புத்தொழில் நிறுவனங்களுக்கு அளித்து வரும் மிகப்பெரிய ஊக்கம் காரணமாகவே 2021-க்குப் பிறகு 6,115 புத்தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளைப் பெருக்கிட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும், தமிழக பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்திட வேண்டும் என்னும் குறிக்கோளின் அடிப்படையிலும், தமிழகம் தொழில் வளர்ச்சியின் சாதனைக் குறியீடாகவே திகழ்கிறது.
தமிழக அரசின் சார்பில் புத்தாக்கத் தொழில் வளர்ச்சிக்காக கோவையில் 2023 ஆகஸ்ட் மாதம் நடத்திய 'தமிழக புத்தொழில் திருவிழா 2023' மாபெரும் வெற்றி கண்டது. 18,835 பார்வையாளர்கள், 1,761 பிரதிநிதிகளும், 841 கண்காட்சி அமைப்பாளர்கள் இத்திருவிழாவில் பங்கேற்றனர். 83 உற்பத்திப் பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 67 புத்தொழில் நிறுவனங்கள் மூலம் 6,251 பொருட்கள் தயாரிக்கும் திட்டங்கள் முன்மொழியப்பட்டன.
அவற்றில், ரூ.3 கோடியே 64 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பீட்டில் 1,674 தொழில்களைத் தொடங்கிட தொழில் முகவர்கள் முன்வந்தனர். 18 மகளிர் சுய உதவிக் குழுக்கள் புத்தாக்கத் தொழில் கூடங்களாக மாறியுள்ளன. 25 மகளிர் தொழில் முகவர்கள் புத்தாக்கத் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் துறை நிதியுதவியால் 150 வேலைவாய்ப்புகளும், டான்சீட்நிதியுதவியில் 1,525 வேலைவாய்ப்புகளும், வேறுபல 238 வேலைவாய்ப்புகளும் என ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் புதிதாக தொடங்கப்பட்ட புத்தாக்கத்தொழில்கள் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
டான்சீட் நிதியுதவியில் தொடங்கப்பட்ட புத்தாக்கத் தொழில்களில் ரூ.314.30 கோடி முதலீடுகள் உயர்ந்துள்ளன. தமிழ்நாடு நிதித் தளம் மூலமாக 714 முதலீட்டாளர்களுடன் இணைந்துள்ள புத்தாக்கத் தொழில்களின் நிதி ரூ.26 கோடியே 40 லட்சமாக உயந்துள்ளது.
புத்தாக்கத் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்குத் தேவையான உதவிகள் அளித்திட 5,393 பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. பெரும்புதூர், ஓசூர் சிப்காட் தொழிற் பூங்காக்களில் புத்தாக்க மையங்கள் ரூ.33.46 கோடியில் நிறுவப்பட்டு, புத்தாக்கத் தொழில் வளர்ச்சிக்கு இந்த அரசு பெரிதும் ஊக்கம் அளித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த ரைஸெல் ஆட்டோமோடிவ் ஸ்டார்ட்அப் நிறுவனம் தமிழக அரசின் டான்சீட் நிதியம் மூலம் ரூ.10 லட்சம் திரட்டிய பிறகு, இந்நிறுவனத்தில் எம்எம் போர்ஜிங்ஸ் ரூ.200 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 60 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
புத்தாக்கத் தொழில் வளர்ச்சிக்கான 5 ஊக்க மையங்களுக்கு சிங்கப்பூரிலுள்ள ஸ்விட்ச் தொழில்நிறுவனத்துக்கு சென்று அதன்செயல்பாடுகளை அறிந்து பயன்பெறும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. 15 புத்தாக்கத் தொழில் ஊக்க மையங்களின் வளர்ச்சிக்காக அவை ஒவ்வொன்றுக்கும் ரூ.5லட்சம் மானிய உதவி வழங்கப்பட்டுள்ளது. புத்தாக்கத் தொழில்களுக்கான போர்ட்டல் கடந்தபிப்ரவரி 29-ம் தேதி ஏற்படுத்தப்பட்டது. 78 புத்தாக்கத் தொழில்கள் இதில் இணைந்துள்ளன.
இப்படிப் பல்வேறு முயற்சிகளை முனைப்புடன் மேற்கொண்டுவருவதன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தாக்கத் தொழில்கள் வளர்ச்சியில் மாபெரும்சாதனைகள் படைத்து வருகிறார் என்று பலரும் பாராட்டுகின்றனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT