Published : 05 May 2024 04:14 AM
Last Updated : 05 May 2024 04:14 AM

திருச்சி அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிறப்பு சிகிச்சைப் பிரிவு திறப்பு

திருச்சி அரசு மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ள வெப்ப அலை சிறப்பு சிகிச்சைப் பிரிவு.

திருச்சி: வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்குவதற்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிறப்பு சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் இ.அருண்ராஜ் கூறியது: கடும் வெயிலை எதிர்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி அரசு மருத்துவமனையில் 12 படுக்கைகளுடன் வெப்ப அலை சிறப்பு சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த சிறப்பு சிகிச்சைப் பிரிவில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதிக வியர்வை காரணமாக உடலில் தேவையான உப்பு குறைந்து சோர்வு ஏற்படும்.

எனவே, சாதாரண குடிநீருக்குப் பதிலாக அவ்வப்போது ஓஆர்எஸ் எனப்படும் உப்பு சக்கரை கரைசலை நீரில் கலந்து உட்கொள்வது நல்லது. எனவே, மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களுக்காக ஓஆர்எஸ் கரைசல் வைக்கப்பட்டுள்ளது. உடல் சூடு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்படு வதைத் தவிர்க்க துரித உணவுகள், அதிக காரம் உள்ள உணவுகளை சாப்பிடுவது, இறுக்கமான ஆடைகள் அணிவது, வெயிலில் நீண்டநேரம் சுற்றுவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

தளர்வான முழுக்கை ஆடைகள், பருத்திநூல் ஆடைகள் அணிய வேண்டும். நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். உணவில் நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்த காய், கீரை, பயறு வகைகள், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். மோர், பத நீர், இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம், எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x