Published : 04 May 2024 11:44 PM
Last Updated : 04 May 2024 11:44 PM
கோவை: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை வரும் 17-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். சனிக்கிழமை அன்று தேனியில் அவரை, கோவை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் கோவைக்கு அழைத்து வரப்பட்டார்.
சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி (சிஇஓ) சங்கர். இவர் தனது நேர்காணல் ஒன்றில், காவல் துறை உயர் அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக புகார்கள் வந்தன. அதன் பேரில் அவரை கோவை போலீஸார் கைது செய்தனர்.
அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை முடிந்த பின்னர், பலத்த பாதுகாப்புடன் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே.எம்.1-வது நீதிமன்றத்தில், நீதிபதி கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை பிணையில் விடுவிக்க வேண்டும் எனக் கூறி வாதாடினார்.
அரசு தரப்பில் ஆஜரான, சைபர் கிரைம் ஆய்வாளர் அருண், சவுக்கு சங்கரை கைது செய்ததற்கான காரணங்களை விளக்கி கூறி பிணையில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஒன்றரை மணி நேரம் தொடர்ந்து நடந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி , சவுக்கு சங்கரை வரும் 17-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
தொடர்ந்து காவல்துறையினர் சவுக்கு சங்கரை பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
முன்னதாக, நீதிமன்றத்துக்கு சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்ட போது, அங்கு திமுக மகளிர் அணியினர், பெண் வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்கள் சவுக்கு சங்கருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து செருப்பு உள்ளிட்டவற்றை அவருக்கு எதிராக காட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT