Published : 04 May 2024 05:02 AM
Last Updated : 04 May 2024 05:02 AM
சென்னை: சென்னையைச் சேர்ந்த நிர்மல் குமார் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:
2020-ல் டிஎன்பிஎஸ்சி சார்பில் தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. அதில் 4 பணியிடங்கள் ஆசிரியர்களாக பணியாற்றியவர்களுக்கு ஒதுக்கப்பட்டன. மற்ற 14 பணியிடங்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு நடைபெற்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அதில் முறையான இனசுழற்சி முறை பின்பற்றி இடஒதுக்கீடு வழங்காமல் பணி நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக அதிக மதிப்பெண் பெற்ற பிற்படுத்தப்பட்ட தேர்வாளர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அதுமட்டுமில்லாமல், அவர்களுக்கான இடஒதுக்கீடு ஆசிரியர் தேர்வாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
எனவே உரிய இன சுழற்சி முறையில் இடஒதுக்கீடு முறையை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரப்பட்டிருந்தது. ஏற்கெனவே இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு பிறப்பித்த இடைக்கால உத்தரவில், பணி நியமனங்கள் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி ஆர்.மஞ்சுளா முன்பாக நடைபெற்றது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.சங்கரன் ஆஜராகி, தகுதியுடைய பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த தேர்வாளர்களுக்கு பொதுப்பிரிவில் இடம் வழங்கப்படவில்லை என்றும் எனவே, அந்த பட்டியலை ரத்து செய்து புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி, கடந்த 2020-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமனத்தை ரத்து செய்து, 4 வாரத்துக்குள் முறையான இடஒதுக்கீடு முறையை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT