Last Updated : 03 May, 2024 07:52 PM

 

Published : 03 May 2024 07:52 PM
Last Updated : 03 May 2024 07:52 PM

மீன்பிடி தடைக்கால உதவித் தொகையை ரூ.10,000 ஆக உயர்த்துக: புதுச்சேரி அதிமுக மனு

புதுச்சேரி: புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாகவும், மழைக்கால உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக கோரியுள்ளது.

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமையில் இன்று முதல்வர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து மனு ஒன்று அளிக்கப்பட்டது. அந்த மனுவில், ‘புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மீனவர்களுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மீன்பிடி தடைக்காலம், பெருமழைக்காலத்தில் நிவாரண உதவி வழங்கப்படுகிறது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இவ்விரு திட்டங்களில் மீனவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படுகிறது.

அண்டை மாநிலமான தமிழகத்தை பொறுத்தமட்டில் அதிமுக ஆட்சியில் மீன்பிடி தடைக்காலத்துக்கு ரூ.8 ஆயிரம், மழைக்கால நிவாரண உதவியாக ரூ.6 ஆயிரம் என ஒவ்வொரு மீனவர்களுக்கும் வழங்கப்பட்டது. இவ்விரண்டு திட்டங்களில் தங்கள் தலைமையிலான புதுச்சேரி அரசானது மீன்பிடி தடைக்காலத்துக்கு ரூ.6 ஆயிரத்து 500 மழைக்கால நிவாரண உதவித் தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் குறைந்தபட்சம் கீழ்நிலை தொழிலாளர்களுக்கு ரூ.320 தினக்கூலியாக வழங்க வேண்டும் என அரசாணை உள்ளது. அதனடிப்படையில் பார்த்தாலும் மீன்பிடி தடைக்காலத்துக்கு 61 நாட்களுக்கு ரூ.19 ஆயிரத்து 520 இழப்பீட்டு தொகையாக அரசு வழங்க வேண்டும். ஆனால் புதுச்சேரி அரசு மீன்பிடி தடைக்காலத்துக்கு ரூ.6 ஆயிரத்து 500 வழங்குகிறது. மத்திய அரசால் அறிவிக்கப்படும் மீன்பிடி தடைக்காலத்துக்கு, மத்திய அரசும் நம் மாநிலத்துக்கு நிதியுதவி அளிக்கிறது.

இந்நிலையில் 3-ல் ஒரு பங்கு நிவாரண உதவியை கூட நாம் மீனவர்களுக்கு வழங்காதது சரியான முடிவு அல்ல. புதுச்சேரி பகுதியில் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தமிழக மீனவ கிராமங்களான கோட்டகுப்பம், பெரிய முதலியார்சாவடி, தந்திரயான்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரம், மழைக்கால நிவாரணம் ரூ.6 ஆயிரம் வழங்கும் போது, நாம் அவர்களை விட குறைந்த மானிய உதவி வழங்குவது சரியானது அல்ல.

எனவே, முதல்வர் இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து மீன்பிடி தடைக்கால நிவாரண உதவியாக ரூ.10 ஆயிரமாகவும், மழைக்கால உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாகவும் வழங்க உரிய நடவடிக்கை எடுத்து இவ்வாண்டிலேயே அறிவிக்க வேண்டும்’ என்று அதிமுக மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x