Published : 03 May 2024 07:01 PM
Last Updated : 03 May 2024 07:01 PM
தஞ்சாவூர்: “தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி வருகிறதோ அப்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கை. திமுக ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லை. இது மக்களை ஏமாற்றும் ஆட்சியாக உள்ளது. தற்போது மின் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் குடிநீருக்காகவும், விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமலும் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், கஞ்சனுார் கற்பகாம்பாள் உடனாய அக்னீஸ்வரர் கோயிலில் உள்ள நவக்கிரகங்களில் ஒன்றான சுக்கிரன் கோயிலில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அவரது மனைவி அனுராதாவுடன் இன்று தரிசனம் மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகத்தில், நான் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பாலானோர் வெற்றி பெறுவோம். நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவார்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி என்ற தீயவர் ஒருவர் இருக்கும்வரை அதிமுகவில் எந்த நல்லதும் நடப்பதாக எனக்கு தெரியவில்லை. வரும் 2026ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் காமராஜர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை மையப்படுத்திய நல்லாட்சி அமையும். கர்நாடகாவில் ஆட்டம் போடும் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோரிடம், ஜனநாயக முறைப்படி காவிரி நீர் தமிழகத்தின் ஜீவாதாரண பிரச்சினை. காவிரி நீர் தமிழக மக்களின் உரிமை எனவே, காவிரியின் குறுக்கே எந்த அணையும் கட்டக்கூடாது என்று சோனியா காந்தி ஒரு அறிவிப்பு செய்தாலே அனைத்தும் நடந்துவிடும்.
தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி வருகிறதோ அப்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கை. திமுக ஆட்சியில் சரியான திட்டமிடல் இல்லை. இது மக்களை ஏமாற்றும் ஆட்சியாக உள்ளது. தற்போது மின் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் குடிநீருக்காகவும், விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்து சமய அறநிலைத்துறை அமைச்சராக உள்ள சேகர்பாபு நல்ல பக்திமான். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் அரசியல் கற்றவர். முன்பொரு காலத்தில் அவர் அதிமுகவைச் சேர்ந்தவர். எனவே, அவர் சிறப்பாக செயல்படுகிறார்” என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT