Published : 03 May 2024 03:55 PM
Last Updated : 03 May 2024 03:55 PM
காரைக்கால்: பணியின்போது உயிரிழந்த காரைக்காலைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரேம்குமாரின் உடல் இன்று ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் போலகம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார்(32). இவர் இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையில், 47-வது படைப்பிரிவில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்.30-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதையடுத்து ராணுவவீரர் பிரேம்குமாரின் உடல் நேற்று (மே 2) விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ராணுவ வாகனத்தில் அவரது சொந்த ஊரான போலகம் பகுதிக்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டு, பிரேம்குமார் வீட்டில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நிரவி-திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.நாக தியாகராஜன் இரவு அஞ்சலி செலுத்தினார்.
புதுச்சேரி அரசு சார்பில் காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் வெங்கடகிருஷ்ணன் இன்று காலை, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன், மண்டல காவல் கண்காணிப்பாளர் ஏ.சுப்பிரமணியன், பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில், இந்தோ-திபெத் பாதுகாப்பு படை வீரர்களின் 24 குண்டுகள் முழங்க, ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
உயிரிழந்த ராணுவ வீரர் பிரேம்குமாருக்கு ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ள செவ்வந்தி என்ற மனைவியும், 5 வயது மகனும் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT