Published : 03 May 2024 04:37 AM
Last Updated : 03 May 2024 04:37 AM

நம்பர் பிளேட்டில் போலீஸ், ஊடகம், வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்ட தடை: தமிழகம் முழுவதும் சோதனை நடத்த திட்டம்

சென்னையில் இரு சக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டில் போலீஸ் என ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை அகற்றி வாகன ஓட்டிக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸார்.

சென்னை: விதியை மீறி வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியவர்களுக்கு சென்னையில் போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்தனர். தமிழகம் முழுவதும் இதுபோல வாகன தணிக்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பலர் தங்கள் வாகனங்களில் ஊடகம், போலீஸ், டாக்டர், வழக்கறிஞர், ஐகோர்ட், தலைமைச் செயலகம், ஆர்மி என பல்வேறு ஸ்டிக்கர்களை ஒட்டுகின்றனர். போக்குவரத்து போலீஸாரின் வாகன சோதனை மற்றும் தணிக்கையின்போது அவர்களில் பலர் போலியாக ஒட்டியது தெரியவந்தது.

இதையடுத்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஒப்புதல்படி, போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கடந்த 27-ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ‘தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது மே 2-ம் தேதி முதல் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'’ என எச்சரித்தார்.

இதற்கிடையே, ஊடகம், டாக்டர், வழக்கறிஞர் என தங்கள் துறை தொடர்பாக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்கள் மட்டும் தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள போக்குவரத்து போலீஸார் அனுமதி அளித்தனர்.

இந்நிலையில், சென்னையில் போக்குவரத்து போலீஸார் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை உட்பட 64 இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்றது. இதில், விதியை மீறி நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியது, எழுதியது என 421 பேருக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

முதல் நாளில் அதிகளவில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட நிலையில், இன்றுமுதல் விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீஸார் தெரிவித்தனர்.

வாகன நம்பர் பிளேட்டுகளில் போலீஸ், ஊடகம், வழக்கறிஞர் என எழுதப்பட்டிருந்த ஸ்டிக்கர்களை அழிக்க சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநருக்கு அறிவுறுத்தப்பட்டது. சிலவற்றை போலீஸார் அழித்தனர். மீண்டும் விதிமீறி ஸ்டிக்கர் ஒட்டினால் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.

துறை சார்ந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களை மறித்து அவர்களின் அடையாள அட்டைகளை பரிசோதித்தனர். சம்பந்தம் இல்லாதவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை போக்குவரத்து போலீஸாரின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இதை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்துவது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இதுஒருபுறம் இருக்க இந்த வாகன சோதனையால் சிறு அசம்பாவிதம் கூட ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் (ஆர்ஐ) அந்தஸ்தில் இருப்பவர்கள் மட்டுமே இந்த வழக்கை கையாள உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x