Published : 03 May 2024 05:14 AM
Last Updated : 03 May 2024 05:14 AM
திண்டுக்கல்: கொடைக்கானலில் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க வந்த முதல்வர் ஸ்டாலின், திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்னதாகவே இன்று சென்னை திரும்புகிறார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு, கடந்த ஏப்.19-ம் தேதி முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், சில நாட்கள் கொடைக்கானலில் குடும்பத்துடன் ஓய்வெடுக்க முடிவு செய்தார். இதற்காக கடந்த ஏப்.29-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் தனி விமானத்தில் மதுரை வந்தார்.
அங்கிருந்து கொடைக்கானலுக்கு கார் மூலம் சென்ற முதல்வர், அங்கு தனியார் ஹோட்டலில் தங்கினார். முதல் நாள் முழுவதும் எங்கும் செல்லாமல் ஹோட்டலிலேயே ஓய்வெடுத்தார். 30-ம் தேதி மாலை பசுமைப் பள்ளத்தாக்கு அருகேயுள்ள கோல்ப் மைதானத்துக்கு சென்று சிறிதுநேரம் கோல்ப் விளையாடினார். அதன்பின், 2 நாட்கள் ஹோட்டலிலேயே ஓய்வெடுத்தார்.
முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் மட்டும் கடந்த 30-ம் தேதி, கொடைக்கானல் பூம்பாறை குழந்தைவேலப்பர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அதேபோல், நேற்று குறிஞ்சியாண்டவர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.
ஓய்வுக்காக முதல்வர் கொடைக்கானல் வந்துள்ளதால், கட்சியினர் யாரும் அவரை சந்திக்க வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதனால், கட்சி நிர்வாகிகள் யாரும் முதல்வரை சந்திக்க வரவில்லை. முதல்வர் தங்கியிருந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று காலை கார் மூலம் கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை செல்கிறார். மே 4-ம் தேதி வரை முதல்வர் கொடைக்கானலில் தங்கி ஓய்வெடுத்துவிட்டு சென்னை திரும்புவதாக ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு ஒரு நாள் முன்னதாகவே முதல்வர் ஸ்டாலின் இன்றே சென்னை திரும்புகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT