Published : 30 Apr 2018 09:48 AM
Last Updated : 30 Apr 2018 09:48 AM

குப்பைகளை அறிவியல் முறையில் 100 சதவீதம் அழிக்க நடவடிக்கை: தற்போது 4 சதவீதம் மட்டுமே அழிப்பதாக அறிக்கையில் தகவல்

சென்னையில் தினமும் சேகரிக்கப்படும் 5 ஆயிரத்து 249 டன் குப்பைகளை அறிவியல் முறையில் 100 சதவீதம் அழிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ள நிதியில் பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்ளாட்சி அமைப்புகளை ஊக்கப்படுத்த இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் வழங்கிய நிதியில், 10 சதவீத அளவு ஊக்க நிதியாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதற்காக நாடு முழுவதும் உள்ள, நகர்ப்புற உள்ளாட்சிகளில் கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்த சுய மதிப்பீட்டு அறிக்கையை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சி சார்பில் மத்திய அரசுக்கு சுயமதிப்பீட்டு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பாக கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. அதில் 17 லட்சத்து 10 ஆயிரத்து 817 வீடுகள் உள்ளன. அவற்றிலிருந்து தினமும் 5 ஆயிரத்து 249 டன் குப்பைகள் உருவாகின்றன.

இவற்றில் 199.58 டன் (மொத்த குப்பையில் 4 சதவீதம்) அறிவியல் முறையில் கையாண்டு அழிக்கப்படுகிறது. 40 வார்டுகளில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என வகை பிரித்து குப்பைகள் பெறப்படுகின்றன. அவ்வாறு மாநகரம் முழுவதும் தினமும் 1050 டன் (20 சதவீதம்) குப்பைகள் வகை பிரித்து பெறப்படுகின்றன.

சுகாதார சீர்கேடு தொடர்பாக ஸ்வச்சத்தா கைபேசி செயலி மூலம் 8490 புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

இவ்வாறு சுய மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் குப்பைகள் அறிவியல் முறையில் கையாண்டு அழிக்கப்படாததால், கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய குப்பைக் கொட்டும் வளாகங்களை சுற்றியுள்ள பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன், காற்றில் நச்சு கிருமிகள் அதிகரிப்பு, நிலத்தடி நீர் பாதிப்பு, குப்பைகள் எரிக்கப்படுவதால் பொதுமக்கள் சுவாசக்கோளாறுகளால் பாதிப்பு போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

அதனால் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை உருவாக்கி, அதன்படி, குப்பைகளை வகை பிரித்து, மறு சுழற்சி செய்தல், மக்க செய்து இயற்கை உரமாக்குதல், குப்பையில் இருந்து மின்சாரம் தயாரித்தல் போன்ற அறிவியல் முறையில் குப்பைகளை அழிக்க அனைத்து உள்ளாட்சிகளையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனால் சென்னை மாநகராட்சி 4 சதவீதம் குப்பைகளை மட்டுமே அறிவியல் முறையில் அழித்து வருகிறது.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “சென்னையில் உருவாகும் குப்பைகளை 100 சதவீதம் அறிவியல் முறையில் அழிப்பதற்கான திட்டத்தை தயாரித்து வருகிறோம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x