Published : 03 May 2024 04:02 AM
Last Updated : 03 May 2024 04:02 AM
உதகை: முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி, உதகை - மஞ்சூர் சாலையில் காலி குடங்களுடன் மக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு தற்போது ஒரு லட்சத்து 15ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இது தவிர தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். ஏப்ரல், மே கோடை சீசன் என்பதால், தினசரி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இந்நிலையில், போதிய மழை பெய்யாததால் இந்த ஆண்டு நீலகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவருகிறது.
பொதுமக்கள் மட்டுமின்றி, வன விலங்குகளும் பரிதவித்து வருகின்றன. உதகை நகராட்சிக்கு 70 சதவீதம் நீர் வழங்கும் முக்கிய நீராதாரமாக விளங்கும் பார்சன்ஸ்வேலி அணையில், நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், 50 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 14 அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. இதனால் வாரத்தில் இரண்டு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு முறை மட்டுமே விநியோகிக்கப்படும் நிலை உள்ளது.
இந்நிலையில், 36-வது வார்டை சேர்ந்த லவ்டேல் மக்களுக்கு, கடந்தசில நாட்களாக குடிநீர் சரியான முறையில் விநியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, உதகையில் இருந்து மஞ்சூர் செல்லக் கூடிய நெடுஞ்சாலையில் நேற்று காலி குடங்களுடன் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு போலீஸார் சென்று சமாதானப்படுத்தி, முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘பல நாட்களாக தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால், வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல முடியவில்லை. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவிட்டதால் ஓரளவு சமாளிக்க முடிகிறது.
உதகையிலுள்ள உள்ளூர் மக்களுக்கே போதுமான அளவு தண்ணீர் வழங்க முடியாத நிலையில், தினசரி ஆயிரக் கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருவதால் ஓட்டல்களுக்கு அதிக அளவில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே, உள்ளூர் மக்களுக்கு தண்ணீர் விநியோகத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும்’’ என்றனர்.
கோடை மழை பெய்யாவிட்டால், மே மாத இறுதியில் உதகை நகராட்சி முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT