Published : 03 May 2024 04:02 AM
Last Updated : 03 May 2024 04:02 AM

திருப்பூர் நஞ்சப்பா ஆண்கள் பள்ளி வளாகத்தில் இருந்து மாற்றி வேறு கட்டிடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படுமா?

திருப்பூர் நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து பாதுகாக்கப் படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள்.

திருப்பூர்: திருப்பூர் நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1200 பேர் படிக்கின்றனர். 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாநகரின் பல்வேறு பகுதி தொழிலாளர்களின் குழந்தைகள் படித்து வரும் இப்பள்ளி வளாகத்தில்தான், வாக்குப் பதிவு இயந்திரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பள்ளி வளாகத்தில் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பாக நடைபயிற்சி மேற்கொள்ளும் சிலர் கூறும்போது, “மாநகரிலுள்ள ஆரம்ப கால பள்ளிகளில் நஞ்சப்பா நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு முக்கிய இடம் உண்டு. திருப்பூர் போன்ற தொழிலாளர் நகரில் குழந்தை தொழிலாளர்கள் உருவாகாமல் பலருக்கும் கல்வி தந்த கல்வித் தலம் இது. ஆனால், மாநகராட்சி பள்ளியின் கட்டிடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பள்ளியின் பழைய உள் கலை அரங்கில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அரசு கட்டிடத்தை பிற தேவைகளுக்கு பயன்படுத்தும் போது, அதன் உண்மையான தேவை நீர்த்துப்போகும். அதேபோல், பள்ளி வளாகத்தில் பொது நூலகமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளியில்வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள், சீலிடப்பட்ட அறையில் 24 மணி நேரமும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சுழற்சி முறையில் போலீஸார் பணியாற்றுகின்றனர். அரசு கட்டிடங்கள் ஏராளமானவைபயன்பாடின்றி இருக்கும் நிலையில், அந்த இடத்தில் இந்த இயந்திரங்களை வைத்து பாதுகாக்கலாம்.

ஆனால், பள்ளியில் இது போன்று வைத்து பராமரிப்பது,அந்த கல்விக்கூடத்தின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் உள்ளது. அரசுப் பள்ளிகள் மென்மேலும் வளர்ச்சி பெறுவது, இதுபோன்ற செயல்களால் நிச்சயம்தடைபடும். திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தின் பெருந்திட்ட வளாகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதுபோன்ற இடத்திலேயே பிரத்யேக ஏற்பாடுகள் செய்து பாதுகாக்கலாம்” என்றனர்.

போலீஸார் கூறும்போது, “வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாக்கும் பணியில் 24 மணி நேரமும் 3 போலீஸார் துப்பாக்கி ஏந்தி ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மூன்றரை ஆண்டுகளாக சீலிடப்பட்ட அறை முன்பு பாதுகாக்கும் பணி நடைபெற்று வருகிறது” என்றனர். தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறும்போது, “இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் நாட்டின் மக்களவை தேர்தல்கள் வருகின்றன.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் கீழ், உள்ளாட்சித் தேர்தல்கள் வருகின்றன. சட்டப்பேரவை, மக்களவை தேர்தலுக்கு பயன்படுத்தப் படும் வாக்குப் பதிவு இயந்திரங்கள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள ஸ்ட்ராங் ரூமில் வைத்து பாதுகாக்கப்படுகின்றன. அதே சமயம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் கீழ் உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற பதவிகளுக்கு நடத்தப்படும் தேர்தலுக்கான இயந்திரங்களை, நஞ்சப்பா பள்ளி போன்று பல்வேறு இடங்களில் ஆங்காங்கே வைத்து 24 மணி நேரமும் பாதுகாக்கப்படுகின்றன.

இவை, கிராம ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தலுக்கு பயன்படுத்தும் இயந்திரங்கள். மக்களவை, சட்டப் பேரவைத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்இவை இரண்டும் தனித் தனி என்பதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள ஒருங்கிணைந்த கிடங்கில் வைத்து பராமரிக்கக்கூடாது. இவற்றை வேறு கட்டிடங்களில் வைத்து பாதுகாப்பதை மாநில தேர்தல் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x