Published : 03 May 2024 06:30 AM
Last Updated : 03 May 2024 06:30 AM

சென்னை | வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 3 இடங்களை சுற்றி ஜூன் 4 வரை ட்ரோன் பறக்க தடை

சென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு கடந்த மாதம் 19-ம்தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. சென்னையில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி, மெரினா கடற்கரையில் உள்ள ராணி மேரி கல்லூரி, கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் ஆகியஇடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இங்கு சுழற்சி முறையில் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள 3 இடங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் சிகப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறப்பதற்கு சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் தடை விதித்துள்ளார்.

இந்த தடை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அடுத்த மாதம் 4-ம் தேதி வரை தொடரும் எனவும் காவல்ஆணையர் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழிவாகனங்களைப் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x