Published : 02 May 2024 12:43 PM
Last Updated : 02 May 2024 12:43 PM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் நேற்று காலை வெடிமருந்து கிடங்கு வெடித்ததில் 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த வெடி விபத்துக்கு, டெட்டனேட்டர், நைட்ரஜன் வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து வெடிமருந்துகளை இறக்கியதே காரணம் என்று போலீஸாரின் எப்ஐஆரில் சொல்லப்பட்டுள்ளது.
காரியாபட்டி அருகேயுள்ள கடம்பன்குளத்தில் ஆவியூரைச் சேர்ந்த சேது மற்றும் ராஜ்குமார் ஆகியோருக்குச் சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குவாரியில் உள்ள வெடிமருந்து கிடங்கில், வெடிபொருட்களை வேனிலிருந்து இறக்கி வைத்துக் கொண்டிருந்தனர். திடீரென வெடிபொருட்களில் உராய்வு ஏற்பட்டு, பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறின. சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு வெடி சப்தம் கேட்டது.
அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த டி.புதுப்பட்டி கந்தசாமி (47), கோவில்பட்டி துரை (25), குருசாமி (60) ஆகியோர் உடல் சிதறி உயிரிழந்தனர். சுமார் ஒரு கி.மீ. வரை உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் சிதறிக் கிடந்தன. மேலும், வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த கிடங்கு முழுவதுமாக தரைமட்டமானது. அதேபோல, வெடிபொருட்கள் கொண்டுவந்த வேன் மற்றும் அருகே நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு வேன் ஆகியவை உருக்குலைந்தன.
விபத்துக்கு காரணம் என்ன?: வெடி விபத்து தொடர்பாக ஆவியூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில், "மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனத் தெரிந்தும், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் கொடுக்காமல், எலெக்ட்ரிக் டெட்டனேட்டர் இருந்த வெடிமருந்து வேனையும் நைட்ரேட் மிக்சர் வெடிமருந்து இருந்த லோடு வேனையும் அருகருகே வைத்து வெடிமருந்துகளை இறங்கியுள்ளனர்.
வெடிவிபத்து ஏற்பட்டு உயிர் சேதத்தை விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும் அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் இருந்து வேலை செய்ததால் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடிமருந்துகளை கையாள போதிய பாதுகாப்பு செய்து கொடுக்காமல் வெடிமருந்து குடோனை முறையாக நிர்வகித்துள்ளனர்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த விபத்து தொடர்பாக ஏற்கனவே உரிமையாளர்களில் ஒருவரான சேதுவை கைது செய்த போலீஸார், மற்றொரு உரிமையாளரான ராஜ்குமாரையும் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையே, வெடிவிபத்து நிகழ்ந்த குவாரியில் சிதறிகிடக்கும் வெடிமருந்துகளை செயலிழக்க செய்யும் பணி தற்போது நடைபெற்றுவருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT