Published : 02 May 2024 04:14 AM
Last Updated : 02 May 2024 04:14 AM
தென்காசி: தென்காசி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் 93 கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தன.
தென்காசி (தனி) மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணிக்கை மையமான கொடிக்குறிச்சி யுஎஸ்பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், 93 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது, வாக்கு எண்ணிக்கை மையத்தில் பொருத்தப்பட்டுள்ள 93 கண்காணிப்புக் கேமராக்களும் செயலிழந்தன. உடனடியாக தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு, சுமார் 3 மணி நேரத்துக்குப் பிறகு கேமராக்கள் மீண்டும்செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன.
இது தொடர்பாக தென்காசிதொகுதி அதிமுக வேட்பாளரும், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வெவ்வேறு கட்டிடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு இருக்கும்போது 93 கேமராக்களும் ஒரே நேரத்தில் இடி-மின்னல் தாக்கி பழுதடைந்து விட்டதாகக் கூறுவது நம்பும்படியாக இல்லை. மாலை 3 மணிக்கு கேமராக்கள் பழுதானதாகக் கூறப்படுகிறது. இரவு 8 மணிக்குதான் வேறு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஏற்கெனவே நீலகிரி, ஈரோடு தொகுதிகளில் இதுபோலசிசிடிவி கேமராக்கள் பழுதடைந்ததாக வந்த செய்திகளைப் பார்க்கும்போது, ஏதோ பெரிய முறைகேடு நடக்குமோ என்று சந்தேகம் எழுகிறது என்று தெரிவித்துள்ளார்.
தென்காசி தொகுதி பாஜக வேட்பாளரும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவருமான ஜான் பாண்டியன், தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “கண்காணிப்பு கேமராக்கள் பழுதானது குறித்த முழு அறிக்கையை, மாவட்ட ஆட்சியர் எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT