Last Updated : 02 May, 2024 04:00 AM

 

Published : 02 May 2024 04:00 AM
Last Updated : 02 May 2024 04:00 AM

பில்லூர் அணையில் இருந்து 2-வது கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் எடுப்பது நிறுத்தம்

வறண்டு பாளம், பாளமாக வெடித்து காணப்படும் பில்லூர் அணை.

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, வனப்பகுதியில் அமைந்துள்ள பில்லூர் அணை கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாகும். பில்லூர் அணையில் 100 அடி வரை தண்ணீரை தேக்கலாம். இதன்மூலம் 10-க்கும் மேற்பட்ட குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

நீலகிரி மாவட்டம் அப்பர் பவானியிலிருந்து அவலாஞ்சி, எமரால்டு, குந்தா அணைகளின் வாயிலாக கெத்தை அணைக்கு தண்ணீர் வந்து, அங்கிருந்து பர்லியாறு நீர்தேக்கம் வழியாக பில்லூர் அணைக்கு நீர் வருகிறது. அதேபோல், கேரளாவில் இருந்து இயற்கையான நீர் வழித்தடங்கள் மூலமும் பில்லூர் அணைக்கு தண்ணீர் வருகிறது. கோடை காலம் தொடங்கியுள்ள சூழலில், பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு மிகவும் குறைந்துள்ளது.

இதனால் குடிநீர் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் உயரதிகாரிகள் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: பில்லூர் அணையின் நீர்மட்ட உயரம் 100 அடி என்றாலும், 40 அடி வரை அணையில் சேறும், சகதியுமாக தான் உள்ளது. 41-வது அடியிலிருந்து தான் நீர் உள்ளது. நேற்றைய நிலவரப்படி பில்லூர் அணையில் 55 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. அதாவது, 15 அடிக்கு மட்டுமே நீர் இருப்பில் உள்ளது.

நீலகிரியில் இருந்தும், இயற்கையான வழித்தடங்கள் மூலமும் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. தற்போது விநாடிக்கு 22 கனஅடி தண்ணீர் வரத்து மட்டுமே உள்ளது. போதிய நீர் இருப்பு இல்லாததால் அணையிலிருந்து மின்சாரம் தயாரிக்க தண்ணீர் திறந்து விடப்படுவது கடந்த சில வாரங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. பில்லூர் 1, பில்லூர் 2 ஆகிய திட்டங்கள் நேரடியாக அணையை மையப்படுத்தி செயல்படுத்தும் திட்டங்களாகும்.

வழக்கமாக பில்லூர் 1-வது திட்டத்திலிருந்து 125 எம்.எல்.டி, 2-வது திட்டத்திலிருந்து 120 எம்.எல்.டி குடிநீர் எடுக்கப்படும். ஆனால், அணையில் நீர் இல்லாததால் பில்லூர் 2-வது திட்டத்தின் மூலம் தண்ணீர் எடுப்பது கடந்த 2 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், 1-வது திட்டத்தில் வெறும் 26 எம்.எல்.டி மட்டுமே எடுக்கப்படுகிறது. இது அனுமதிக்கப்பட்ட அளவை விட மிகக் குறைவாகும்.

பவானியாற்றை மையப்படுத்தியுள்ள பில்லூர் 3-வது திட்டத்தின் மூலம் 40 எம்.எல்.டி எடுக்கப்படுகிறது. இதேபோல், பில்லூர் அணை, பவானியாற்றினை மையப்படுத்தியுள்ள மற்ற குடிநீர் திட்டங்களிலும் எடுக்கப்படும் நீரின் அளவு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x