Last Updated : 24 Apr, 2018 06:20 PM

 

Published : 24 Apr 2018 06:20 PM
Last Updated : 24 Apr 2018 06:20 PM

புதுச்சேரி சிறையில் கைதிகளுக்கு விரைவில் யோகா பயிற்சி: கிரண்பேடி

புதுச்சேரி மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு விரைவில் யோகா பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். மேலும் ஜாமீன் விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டுமென அவர் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் தொடர்ந்து செயின் பறிப்பு, சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்தோர் இடையே மோதல் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதுதொடர்பாக ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோர் போலீஸ் அதிகாரிகள் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர் திருபுவனைக்கு வந்ததால் தனியார் நிறுவனமே மற்றொரு தரப்பால் சூறையாடப்பட்டது. இதில் ரூ. 3 கோடி பொருட்கள் சேதமடைந்தன. இதுபோல் தொடர் சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் சிறைக்கு சென்று ஆளுநர் கிரண்பேடி ஆய்வு நடத்தியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு மோசமான நிலை தொடர்பாக அவரிடம் கேட்டதற்கு, "புதுச்சேரியில் குற்றங்களைக் குறைக்க சிறைத்துறை, காவல்துறை, சட்டத்துறை, சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க கடுமையான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஜாமீனில் வெளியே வரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றம் புரிந்தால் அவர்களுக்கு மீண்டும் ஜாமீன் வழங்கக்கூடாது. தண்டனை முடிந்து வெளியே வரும் குற்றவாளிகளைக் கண்காணிக்க காவல் துறையில் வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் குற்றவாளிகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க உள்ளோம்" என்று கிரண்பேடி தெரிவித்தார்.

சிறையில் சீர்திருத்தம் கொண்டு வந்த நீங்கள் புதுச்சேரி சிறையில் ஆய்வுக்குப் பிறகு என்ன செய்ய உள்ளீர்கள் என்று கேட்டதற்கு, "புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகளை நல்வழிப்படுத்த அவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்க உள்ளோம். இதற்காக மத்திய சிறையில் ஒரு வாரத்துக்குள் யோகா பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. கைதிகளுக்கு மத்தியப் பல்கலைக்கழகத்தின் உதவியோடு மனோதத்துவ பயிற்சிகளும் அளிக்க உள்ளோம்" என்று கிரண்பேடி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x