Last Updated : 29 Apr, 2018 06:48 PM

 

Published : 29 Apr 2018 06:48 PM
Last Updated : 29 Apr 2018 06:48 PM

இலவச அரிசி நிபந்தனையை திரும்பப் பெற்றார் கிரண்பேடி: ஆளுநருக்கு எதிராக முக்கியக் கட்சிகள் முற்றுகைப் போராட்டம்

இலவச அரிசியை ரேஷனில் வழங்குவதற்கான புதிய நிபந்தனையை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திரும்பப் பெற்றார். இந்நிலையில் திங்கள்கிழமை காலை கிரண்பேடியை கண்டித்து திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் கூட்டாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளதாக அறிவித்துள்ளன.

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி திருக்கனூர் அடுத்த மண்ணாடிப்பட்டு கிராமத்தில் சனிக்கிழமை ஆய்வுப்பணி மேற்கொண்டார். அப்போது கிராமங்களில் அதிகளவில் குப்பை கிடப்பதை பார்த்தார்.

அதையடுத்து திறந்தவெளிளியில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் இல்லை என தொகுதி எம்எல்ஏ, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆகியோர் இணைந்து குடிமைப்பிரிவு ஆணையரிடம் சான்றிதழ் கொடுக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட கிராமங்களில் இலவச அரிசி வழங்கப்படமாட்டாது என்று கூறியிருந்தார். இதற்கு அதிமுக, மார்க்சிஸ் கம்யூனிஸ்ட், திமுக உள்ளிட்ட கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ஆளுநரின் இந்த அறிவிப்பை கண்டித்து போராட்டமும் அறிவித்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு ஆளுநர் அந்த நிபந்தனையை திரும்பப் பெற்றார்.

இது தொடர்பாக அவர் தனது வாட்ஸ்அப்பில் கூறிய தகவல்:

''கிராமங்களில் திறந்தவெளி மலம் கழிப்பதை ஒழிப்பது, சுகாதாரத்தைப் பேணுவது ஆகிவற்றை மையமாக வைத்துதான் இலவச அரிசி திட்டத்துக்கு நிபந்தனை விதித்தேன். ஏழைகளுக்கு இலவச அரிசியைத் தடுக்க வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. ஏற்கெனவே இலவச அரிசி கொள்முதல் மற்றும் விநியோகம் செய்வதற்கான பணிகளை குடிமை வழங்கல் துறை செய்து வருகிறது. இதற்கான கோப்புகளில் ஏற்கெனவே கையெழுத்திட்டுள்ளேன்.

கிராமங்களில் நல்ல சுகாதாரம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அறிவிப்பை வெளியிட்டேன். இருந்தாலும் கிராமமக்களின் நலனை கருத்தில் கொண்டு, சுகாதார சூழ்நிலையை அவர்களே ஏற்படுத்திக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலும் இலவச அரிசி திட்டம் தொடர்பான எனது முந்தைய நிபந்தனைகளை நிறுத்தி வைக்கிறேன். ஏழைகளுக்கு தரமான உணவு, சுகாதாரம் கிடைக்க இது போன்ற நடவடிக்கையை எடுத்து வருகிறேன்''

என்று கூறியுள்ளார்.

திமுக முற்றுகை

இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் மாளிகையை திமுக முற்றுகையிட உள்ளதாக தெரிவித்துள்ளது.

இலவச அரிசியை ரேஷனில் விநியோகிக்க எதிர்ப்பாக ஆளுநர் கிரண்பேடி செயல்படுவதாக குற்றம்சாட்டி வரும் 30-ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட உள்ளோம்.ஆளுநர் மாளிகை அருகே நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் திமுக எம்.பிக்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் பங்கேற்க உள்ளதாக திமுக சட்டமன்ற குழு தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.

திமுக போராட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள், பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x