Published : 01 May 2024 05:44 PM
Last Updated : 01 May 2024 05:44 PM
புதுச்சேரி: மத்திய பாஜக அரசு 44 தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தி, அதனை 4 சட்டங்களாக சுருக்கி போராடக்கூடிய உரிமையை பறித்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி அஜீஸ் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மே தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் புதுச்சேரி மாநில செயலாளர் ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுதா, பெருமாள், பிரபுராஜ், கலியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஜி. ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்: “ஒவ்வொரு மே தினத்தன்றும் உழைப்பாளர் மக்கள் தங்களுடைய உரிமைகளை பாதுகாப்பதற்காகவும், பெற்ற சலுகைகளை பாதுகாப்பதற்காகவும், உரிமைகளுக்காக போராடுவதற்காக சபதம் ஏற்கக் கூடிய நாளாக மே தினத்தை கொண்டாடி வருகின்றோம். கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தியது மட்டுமல்லாமல், கார்ப்பரேட் ஆதரவு கொள்கையை கடைபிடிப்பதால் நாட்டு மக்களுடைய வாழ்வாதாரம், வாழ்க்கைத் தரம் வெகுவாக சரிந்து வருகிறது.
இத்தகைய பின்னணியில் தான் வலிமையான மக்களவை தேர்தலை நாம் சந்தித்து வருகின்றோம். பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையின்போது அவர் ஆற்றும் உரை என்பது சந்தர்ப்பமானது, நேர்மையற்றது, மோசடியானது. இண்டியா கூட்டணி கட்சிகளின் சார்பில் முன்வைக்கக்கூடிய தேர்தல் அறிக்கையில் உலகத்திலேயே பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாக இருக்கக்கூடிய நாடுகளில் நம்பர் ஒன் நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு எப்படி வருகின்றது.
கடந்த 10 ஆண்டுகளாக மத்திய பாஜக ஆட்சி, கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடன்கள் ரூ.16 லட்சம் கோடியை ரத்து செய்துள்ளது. இதன் காரணத்தினால் வங்கிகளுக்கு அந்த பணத்தை மத்திய அரசு ஈடு செய்கின்றது. அந்த பணம் மக்களுடைய வரி பணம் தானே. அதே போன்று பெட்ரோல், டீசலுக்கு வரி போட்டு போட்டு ரூ.25 லட்சம் கோடியை அடித்துள்ளார்கள்.
இதுபோன்ற காரணத்தால் தான் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளது. பாஜக தனது கொள்கை அறிக்கையில் காந்திய சோசியலிசம் கடைபிடிப்பதாக சொல்கின்றனர். ஆனால் காந்தி, ராமராஜ்யம் சாத்தியமில்லை என்றும், பெரும்பான்மையான மக்களுக்கு போதிய உணவு கூட கிடைக்கவில்லை என்றும் சொல்லியுள்ளார்.
இது புதுச்சேரிக்கு பொருந்தும். இங்கு ரேஷன் கடைகளை மூடிவிட்டனர். ஆனால் கடந்த 2021 சட்டப்பேரவையில் பாஜக ரேஷன் கடைகளை திறப்போம் என்றார்கள். ஆனால் திறக்கவில்லை. ஆகவே இன்றைய சூழலில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் போராடி பெற்ற சலுகைகளை மீட்டு பெறுவதற்காகவும், ரேஷன் கடை, தொழிலாளர்கள் பிரச்சினைகள் உள்ளிட்ட நலன்களுக்காக போராட மார்சிஸ்ட் கட்சி சபதம் ஏற்கும்.
மே தினம் கொண்டாட கூடிய இந்த நாளில் பாஜக அரசு 44 தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தி, அதனை 4 சட்டங்களாக சுருக்கி இருக்கின்றார்கள். அதில் 8 மணி நேர வேலை என்பதை திருத்தப்பட்டுள்ளது. சங்கம் வைக்கும் உரிமையை பறிக்கப்பட்டுள்ளது.
போராடக்கூடிய உரிமை பறித்துள்ளார்கள். தொழிற்சங்கத்துக்கு தலைமை தாங்கி போராடினால் அந்த தொழிற்சங்க தலைவருக்கே அபராதம் விதிக்கலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்திருக்கின்றார்கள். இது மக்கள் விரோதமான அரசு அல்ல, தொழிலாளர் விரோத அரசு.” என்று விமர்சனம் செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT