Published : 01 May 2024 11:47 AM
Last Updated : 01 May 2024 11:47 AM
சென்னை: தமிழகம் முழுவதும் நிலவி வரும் கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாம்பழம் மற்றும் பப்பாளி பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகம் முழுவதும் நிலவி வரும் கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மாம்பழம் மற்றும் பப்பாளி பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வறட்சியால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு நிவாரணம் வழங்க இதுவரை தமிழக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டின் மாம்பழத் தலைநகரம் என்பது சில பத்தாண்டுகளுக்கு முன் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் தான். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. தருமபுரி , சேலம் மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் மாம்பழ சாகுபடி நடைபெற்று வருகிறது. மல்கோவா, அல்போன்சா, செந்தூரம், பீத்தர், தோத்தாபுரி உள்ளிட்ட 30 மாம்பழ வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.
அதேபோல், தருமபுரி மாவட்டத்தில் பப்பாளி பழங்கள் குறிப்பிடத்தக்க அளவில் விளைவிக்கப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் ரெட்லேடி வகை பப்பாளிகள் உலகம் முழுவதும் புகழ் பெற்றவை ஆகும். தருமபுரி மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 300 ஏக்கரிலும், சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஏறக்குறைய 200 ஏக்கரிலும் பப்பாளி வகைகளைவிவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மழை பெய்யவில்லை. அதனால், இம்மாவட்டங்களில் உள்ள பாசன ஆதாரங்கள் அனைத்தும் முழுமையாக வறண்டு விட்டன. நிலத்தடி நீர் மட்டமும் பல நூறு அடிக்கும் கீழ் சென்று விட்டது. அதுமட்டுமின்றி, கடந்த மார்ச் மாதம் முதல் கடுமையான வெப்பம் வாட்டுவதால் மாமரங்களில் பூக்களும், வடுக்களும் உதிர்ந்து விட்டன.
தப்பிய காய்களை காப்பாற்ற வேண்டும் என்றால் மாமரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆனால், பாசன ஆதாரங்களும், நிலத்தடி நீரும் இல்லாத நிலையில் டிராக்டர்களில் தண்ணீர் கொண்டு வந்து மாந்தோப்புகளுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவல நிலைக்கு அங்குள்ள விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். பப்பாளி சாகுபடி செய்துள்ள உழவர்களும் கிட்டத்தட்ட இதே நிலையைத் தான் எதிர்கொண்டுள்ளனர்.
மா மற்றும் பப்பாளி பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு பாய்ச்ச 5 டிராக்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு டிராக்டர் தண்ணீருக்கு ரூ.750&ம், 5 டிராக்டர் நீரை ஒரே நேரத்தில் வாங்கினால் ரூ.3,5000-ம் வசூலிக்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 5 முறை தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும் என்பதால் ஏக்கருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மட்டும் ரூ.17,500 செலவாகிறது.
மா மற்றும் பப்பாளி சாகுபடி செய்யும் விவசாயிகளால் இவ்வளவு செலவை சமாளிக்க முடியாது. 5 முறை தண்ணீர் பாய்ச்சியும் கூட மா மற்றும் பப்பாளி விளைச்சல் மிகவும் குறைவாகவே இருப்பதால் அவற்றை அறுவடை செய்தாலும் கூட, சாகுபடிக்காக செய்த செலவை விவசாயிகளால் எடுக்க முடியாது என்பது தான் உண்மையாகும்.
ஒருபுறம் மாம்பழ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னொருபுறம் சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளும் மாம்பழத்திற்கு உரிய விலை வழங்காமல் உழவர்களை சுரண்டி வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் டன் மாம்பழங்கள் விளைகின்றன.
அவற்றில் பெங்களூரா எனப்படும் தோத்தாபுரி, அல்போன்சா வகை மாம்பழங்கள் மாம்பழக்கூழ் ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. ஆனால், அவற்றுக்கு ஆலைகள் உரிய விலை கொடுக்க மறுக்கின்றன.
வறட்சியால் விளைச்சல் பாதிப்பு, சரியான கொள்முதல் விலை கிடைக்காதது ஆகியவற்றால் மட்டும் மாம்பழ உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம் வரையிலும், பப்பாளி உழவர்களுக்கு ரூ.1 லட்சம் வரையிலும் இழப்பு ஏற்படுகிறது. சேலம் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் மா, பப்பாளி சாகுபடி செய்யும் விவசாயிகள் எவரும் கோடீஸ்வரர்கள் அல்ல. அவர்களுக்கு ஏற்படும் இழப்பின் ஒரு பகுதியைக் கூட தமிழக அரசு ஈடு செய்யவில்லை என்றால், அவர்கள் மீள முடியாத கடன் சுமையில் சிக்கிக் கொள்வார்கள்.
எனவே, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். மா மற்றும் பப்பாளி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். அத்துடன் மாம்பழக்கூழ் ஆலைகளில் கொள்முதல் செய்யப்படும் மாம்பழங்களுக்கு கிலோவுக்கு ரூ.50 கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT