Published : 01 May 2024 06:10 AM
Last Updated : 01 May 2024 06:10 AM
சென்னை: அண்மை காலமாக தனியார் வாகனங்களில் பத்திரிகை, தலைமைச் செயலகம், காவல் துறை, வழக்கறிஞர், உயர் நீதிமன்றம், மருத்துவர், தீயணைப்பு துறை, ராணுவம் போன்ற துறைகள், நிறுவனங்களின் பெயர்கள் எழுதப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் ஆய்வு செய்தபோது பலர் தங்கள் வாகனங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர்களுக்கும், அவர்களுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. குறிப்பாக குற்றச் செயல்களில் தொடர்புடைய சிலர் கூட இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி போலீஸாரின் கவனத்தை திசை திரும்பி நழுவினர்.
இதை தடுக்கவும், சம்பந்தப்பட்ட துறை சார்ந்தவர்களின் மதிப்பை வலுப்படுத்தும் வகையிலும் சென்னை காவல் ஆணையர் ஒப்புதலின்பேரில் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் கடந்த 27-ம்தேதி சுற்றறிக்கை ஒன்றைவெளியிட்டார். அதில், ‘குற்றம்சாட்டப்பட்டவர்களும் வாகனத்தில் ஊடகம், காவல் துறைஉட்பட பல்வேறு வகையான ஸ்டிக்கர்களை தவறாக பயன்படுத்தி வருகிறார்கள்.
இதனால் காவல் துறையின்கடுமையான நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து விடும்நிலை உள்ளது. எனவே, தனியார் வாகனங்களில் அரசால்அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீதுவரும் 2-ம் தேதி முதல் மோட்டார் வாகன சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்தார்.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பும், ஆதரவும் சரிசம அளவில் வந்துள்ளதாக கூறும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் இதுகுறித்து மேலும், கூறியதாவது:
காவல்துறை, ஊடகம், வழக்கறிஞர், மருத்துவர், அரசியல் கட்சி என ஸ்டிக்கர் ஒட்டுவதால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், அண்மை காலமாக இதற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் கூட இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி வானங்களில் பயணிக்கின்றனர்.
இது சம்பந்தப்பட்ட துறைக்குஅவமரியாதையை ஏற்படுத்தும். மேலும், குற்றவாளிகள் கூட இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி போலீஸாரின் கவனத்தை திசை திருப்பி நழுவி விடுகின்றனர். மேலும், போலீஸாரின் வாகன சோதனையில் இருந்து தப்பிக்க இது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர்.
இதை ஆரம்பத்திலேயே தடுக்கவில்லை என்றால் எதிர் காலத்தில் பெரிய அளவிலான அசம்பாவிதத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதை தடுக்கும் வகையில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்ட தடை விதித்துள்ளோம்.
வழக்கறிஞர்கள், ஊடகத்துறையினர், மருத்துவர்கள் உட்பட மேலும் சில துறையைச் சேர்ந்தவர்கள் தங்களது கோரிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். அதை கவனித்து வருகிறோம்.
தேவைப்பட்டால் எங்களது உத்தரவில் ஒரு சில மாற்றங்கள் செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஆனால், போலிகள் ஊடுருவுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் மீது சமரசமற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஒரே வாகனத்தில் பல ஸ்டிக்கர்: ஒரே வாகனத்தில் ஊடகம், வழக்கறிஞர், மருத்துவர் என சிலர் அனைத்து அடையாளங்களையும் வெளிப்படுத்தி ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர். மெக்கானிக், உணவு டெலிவெரி செய்பவர்கள், கடை வைத்திருப்பவர்கள், எந்த வேலைக்கும் செல்லாதவர்கள் கூட ‘ஊடகம், காவல், வழக்கறிஞர் உட்பட பல்வேறு துறை சார்ந்த ஸ்டிக்கர்களை தங்களது வாகனங்களில் ஒட்டி பயணிக்கின்றனர்.
அதேபோல் கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் கூட எந்த கட்சி ஆட்சி செய்கிறதோ அந்த கட்சியின் சின்னம், ஸ்டிக்கரை ஒட்டி கொண்டு ஆதாயம் அடைய முயல்கின்றனர்.
இதை தடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம். இதற்குஅனைவரது ஒத்துழைப்பும் தேவை. துறை சார்ந்தவர்கள் சென்னை காவல் துறை,போக்குவரத்து காவல் துறைசமூகவலைதள பக்கங்களில்ஆலோசனை தெரிவிக்கலாம். நேரிலும் வழங்கலாம். பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனித உரிமை பெயரில்.. தமிழகத்தில் சமீபகாலமாக மனித உரிமை அமைப்பு, மனித உரிமை கழகம் போன்ற பெயர்களில் சிலர் கட்டப் பஞ்சாயத்து, மிரட்டி பணம் பறித்தல் உட்பட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீதும் போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT