Published : 02 Apr 2018 09:30 AM
Last Updated : 02 Apr 2018 09:30 AM
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் 40 பேர், வெப்பமயமாதலில் இருந்து புவியைக் காக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டு ‘ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ தினமாகக் கொண்டாடினர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏப்ரல் முதல் நாளன்று ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லி மற்றவர்களை முட்டாளாக்கி பார்ப்பது வழக்கம்.
அவர்களுக்கு மத்தியில், அலங்காநல்லூர் இளைஞர்கள் சற்று வித்தியாசமாக இந்த தினத்தில் மற்றவர்களை முட்டாளாக்குவதை தவிர்த்து புவியை வெப்பமயமாதலில் இருந்து காக்கும் கருத்தை முன்நிறுத்தி, மரக்கன்றுகளை நட்டு ‘ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ தினமாகக் கொண்டாடினர்.
இதுகுறித்து அலங்காநல்லூரைச் சேர்ந்த பொன். குமார் கூறியதாவது:
நாங்கள் அலங்காநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள். இதற்கு முன் நாங்கள் படித்த பள்ளிக்கு ரூ.10 லட்சத்தில் புரொஜக்டர் வசதியுடன் கூடிய பெரிய வகுப்பறையை கட்டித் தந்தோம். படிக்க வசதி இல்லாத குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்போம். எங்கள் ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நடுவோம். இதுபோன்ற எங்களால் முடிந்த பல சமுதாயப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.
இதற்காக எங்களை ஒருங்கிணைக்க ஒரு ‘வாட்ஸ் ஆப்’ குரூப் வைத்துள்ளோம். அந்த குரூப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு தகவல் பரவியது. அதில், ‘‘ஏப்ரல் முதல் நாளில் மற்றவர்களை ‘ஏப்ரல் பூல்’ செய்வதற்கு பதிலாக குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றை நடுங்கள், ‘ஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ என்று பெயரிடுங்கள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த தகவல் வெறுமனே அடுத்தடுத்த நபர்களுக்கு பரப்பப்படும் சாதாரண தகவலாக மட்டும் இருந்துவிடக் கூடாது என நினைத்து, அதை செயல்படுத்த முடிவு செய்தோம். அதற்காக, ஏப்ரல் பூல் தினத்தை ஏப்ரல் கூல் தினமாக்க மரக்கன்றுகளை நடுவதற்கு ஏற்பாடு செய்தோம். தற்போது மழைக்காலம் இல்லை. கோடைக்காலம் என்பதால் மரக்கன்று நடுவது சாதாரண விஷயம் இல்லை. அதனால், பாதுகாப்பான இடத்தில் நட முடிவு செய்தோம்.
அதற்காக, மரங்களே இல்லாத அலங்காநல்லூர் ஊரின் காவல் நிலையத்தை தேர்ந்தெடுத்தோம். அங்கு காலியாக இருந்த மூன்றரை ஏக்கர் நிலத்தில், காவல்நிலைய நுழைவு வாயிலில் இருந்து மரக்கன்றுகளை நட்டோம்.
இந்த வெயிலில் சிறிய செடிகளை வைத்து வளர்த்து மரங்களாக்குவது மிகவும் சிரமம். அதனால், ஏற்கெனவே ஒன்றரை ஆண்டாக வளர்த்த மரக்கன்றுகளைக் கொண்டு வந்து காவல்நிலையத்தில் நட்டுவைத்தோம். கால்நடைகள் மேயாமல் இருப்பதற்காக மரக்கன்றைச் சுற்றிலும் 5 அடி உயரத்துக்கு பாதுகாப்பாக கம்பி வேலியை அமைத்துள்ளோம்.
இந்த மரக்கன்றுகளுக்கு நாங்களே வாரம் ஒருமுறை தண்ணீர் ஊற்றத் திட்டமிட்டுள்ளோம். போலீஸாரும் நாங்களும் தண்ணீர் ஊற்றுகிறோம் என்றனர். இந்த சிறிய மரங்களை பெரிய மரங்களாக்கி, அதன் நிழலில் அமர்வோம். அதுபோல, ஊரின் சில இடங்களிலும் மரக்கன்றுகளை நட்டோம். இந்த மரக்கன்றுகளை நடுவதற்கு ரூ.10 ஆயிரம் வரை செலவானது. ஊரைக் குளுமையாக்க எங்களுக்குள் அந்த செலவை பகிர்ந்துகொண்டோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT