Last Updated : 30 Apr, 2024 04:03 PM

 

Published : 30 Apr 2024 04:03 PM
Last Updated : 30 Apr 2024 04:03 PM

புதுச்சேரி வாரச்சந்தையில் மாடுகளுக்கு நீர்த் தொட்டி; தண்ணீர் தெளிக்கவும் ஏற்பாடு

புதுச்சேரி: புதுச்சேரி கிராமத்தில் வாரந்தோறும் நடக்கும் சந்தைக்கு வந்த மாடுகளுக்கு நீர்த் தொட்டி அமைத்ததுடன், மாடுகளுக்கு தண்ணீர் தெளிக்கவும் கொம்யூன் பஞ்சாயத்து ஏற்பாடு செய்திருந்தது. சந்தைக்கு வந்தோருக்கு மோர், தண்ணீரும் வழங்கப்பட்டது.

புதுச்சேரியின் மதகடிப்பட்டு கிராமத்தில் செவ்வாய்தோறும் நடைபெறும் மாட்டு வாரசந்தை மிக பிரபலமானது. பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இருந்து 2 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கி வருகிறது. இந்த சந்தையில் கோயம்புத்துர், ஈரோடு, பொள்ளாச்சி, சேலம், பண்ருட்டி, பெங்களுரு, வந்தவாசி ஆகிய பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். புதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு சந்தை என்ற பெருமையைப் பெற்று இச்சந்தையில் வாரம்தோறும் ஏராளமான மாடுகள் விற்பனையாகும்.

மாட்டு சந்தையை ஒட்டி சந்தைப் பகுதியில் பல்வேறு கடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். இங்கு மதகடிப்பட்டு சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் இங்கு வந்து பொருட்கள் வாங்கிச் செல்வார்கள். மேலும் இங்கு நடைபெறும் மாட்டுச் சந்தையில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாட்டு வியாபாரிகள் மாடுகளை இங்கிருந்து வாங்கி வெளி மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் வாகனங்களில் ஏற்றிச் செல்வர். இதனால் இந்த மதகடிப்பட்டு மாட்டு சந்தையில் அதிக அளவில் மாடுகள் விற்பனைக்கு வரும்.

தற்போது மாடுகள், மாட்டுக்கு தேவையான பொருட்கள், காய்கறிகள், மளிகைப்பொருட்கள் கிராமங்களில் இருந்து விற்பனைக்கு வருகிறது. தற்போது புதுவையில் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. சில நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சாலை சந்திப்புகளில் பசுமைப் பந்தல் அமைத்து வாகன ஓட்டிகளுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கட்சியினர் நீர், மோர்ப் பந்தல் அமைத்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் குலோந்துங்கன் அறிவுறுத்தலின்பேரில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து சார்பிலும் நீர், மோர்ப் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் பறவைகள், கால்நடைகள் குடிப்பதற்காக ஆங்காங்கே தண்ணீர் தொட்டியும் திறந்து வைக்கப்பட்டு வருகிறது. வாரச் சந்தைக்கு வந்திருந்த மாடுகளுக்கு ஆணையர் தண்ணீர் தெளித்து அந்நிகழ்வை தொடங்கி வைத்ததுடன் தண்ணீர் தொட்டிக்கும் ஏற்பாடு செய்திருந்தார்.

இதுதொடர்பாக மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் கூறுகையில், கோடையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளதால் ஆட்சியர் உத்தரவுப்படி புதுவை மதகடிப்பட்டில் வாரசந்தையில் கால்நடைகளின் தாகம் தணிக்க குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதில் தேவையான அளவு தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. கால்நடைகளின் மீது தண்ணீர் அடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படாது. மேலும் சந்தைக்கு வருவோருக்கு மோர் தரவும் ஏற்பாடு செய்துள்ளோம். இதுமட்டுமில்லாமல் எங்கள் கொம்யூன் பஞ்சாயத்திலும் தண்ணீர், நீர் மோர் தருகிறோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x