Published : 30 Apr 2024 01:21 PM
Last Updated : 30 Apr 2024 01:21 PM

“பீர் உற்பத்தியை அதிகரிக்க ஆணை: தமிழகத்தில் நடப்பது அரசா, மது வணிக நிறுவனமா?” - அன்புமணி

அன்புமணி ராமதாஸ்

சென்னை: கோடைக்காக பீர் உற்பத்தியை அதிகரிக்க மது ஆலைகளுக்கு டாஸ்மாக் நிறுவனம் ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பது அரசா... மது வணிக நிறுவனமா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழகத்தில் கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், குளிர்ந்த பீருக்கான தேவை பெருகுவதால், பீர் உற்பத்தியை அதிகரிக்கும்படி மது ஆலைகளுக்கு தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் ஆணையிட்டுள்ளது. கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கவும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, பீர் உற்பத்தியை பெருக்குவதில் ஆர்வம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் மாதம் 28 லட்சம் பெட்டிகள், அதாவது 3 கோடியே 36 லட்சம் புட்டிகள் பீர் விற்பனை செய்யப்படுவது வழக்கம். கடுமையான வெப்பம் காரணமாக மே மாதத்தில் பீர் விற்பனை 35 லட்சம் பெட்டிகள், அதாவது 4 கோடியே 20 லட்சம் புட்டிகள் என்ற அளவுக்கு உயரும் என்று டாஸ்மாக் நிறுவனம் கணக்கிட்டிருக்கிறது.

இது தமிழகத்தில்உற்பத்தி செய்யப்படும் பீர் புட்டிகளின் அளவை விட அதிகம் என்பதால் தேவையை சமாளிக்க உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று மது ஆலைகளை டாஸ்மாக் நிர்வாகம் கேட்டுக் கொண்டிருப்பதாக டாஸ்மாக் வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் போன்றவற்றின் தேவையை நிறைவேற்றுவது தான் அரசின் கடமை. பீர் போன்ற மதுவகைகளின் தேவையை நிறைவேற்றுவது தமிழக அரசின் கடமை அல்ல.

மாறாக, மது வணிகத்தைக் கட்டுப்படுத்துவது தான் மக்கள் நலன் காக்கும் அரசின் கடமை ஆகும். மதுவின் தேவை அதிகரித்தால் கூட அதைப் பற்றி அரசு கவலைப்படவில்லை. மருத்துவப் பயன்பாடு தவிர, மற்ற தேவைகளுக்கு மது இல்லாவிட்டால் அதனால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள்; யாருடைய குடியும் மூழ்கி விடாது.

இன்னும் கேட்டால் மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மதுவின் பயன்பாட்டைக் குறைப்பது குறித்தும் பரப்புரை செய்வதற்காக தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. அதைப் பயன்படுத்தி கோடையில் அதிகரிக்கும் பீரின் தேவையைக் குறைக்க தமிழக அரசு பரப்புரை செய்திருக்க வேண்டும்.

ஆனால், அதற்கு மாறாக பீர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று மது ஆலைகளைக் கேட்டுக் கொண்டிருப்பதன் மூலம் மக்கள் நலன் காப்பதை விட மது வணிகம் செய்வதே தனது முதல் கடமை என்பதை திமுக அரசு நிரூபித்திருக்கிறது. மது வணிகத்தை முதன்மை நோக்கமாக கொண்டதற்காக அரசு வெட்கப்பட வேண்டும்.

பீர் உற்பத்தியை அதிகரிக்கும்படி கேட்டுக் கொண்டது மட்டுமின்றி, அதற்காக மது ஆலைகளிடையே கூட்டணியையும் தமிழக அரசு ஏற்படுத்தியிருக்கிறது. கிங்ஃபிஷர் எனும் பெயர் கொண்ட பீருக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அந்த வகை பீரை தயாரிக்கும் இரு மது ஆலைகளுடன், இன்னொரு மது ஆலையையும் சேர்த்து அதிக அளவில் பீரை தயாரிக்க டாஸ்மாக் கேட்டுக் கொண்டுள்ளது.

அதே போல், புதிய வகை பீர்களை தமிழகத்தில் விற்பனை செய்வதற்காக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மது ஆலை ஒன்றுடன் தமிழகத்தைச் சேர்ந்த மது ஆலை ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது. குடி மக்களின் பீர் தாகத்தைத் தீர்க்க தமிழக அரசு, அதன் பணி வரம்பைத் தாண்டி மேற்கொண்டு வரும் இத்தகைய நடவடிக்கைகள் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தக் கூடியவை.

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம் ஏரி வறண்டு விட்டது. வீராணம் ஏரி மட்டைப்பந்து திடலாக மாறிவிட்டது. சென்னையின் பிற ஏரிகளும் வேகமாக வறண்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு 10%க்கும் கீழாக குறைந்து விட்டது.

இன்னொருபுறம் அரிசியில் தொடங்கி மளிகைப் பொருட்கள், எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கணிசமாக அதிகரித்துள்ளன. இந்தச் சிக்கல்களுக்கு தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மது பானங்களின் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காக மட்டும் துடிப்புடன் செயல்படுவதன் மூலம் தமிழகத்தில் மக்களாட்சி நடக்கவில்லை, மதுவணிக நிறுவன ஆட்சி நடக்கிறது என்பது உறுதியாகிறது.

மதுவை விற்பது மக்கள் நல அரசின் பணி அல்ல என்பதை உணர்ந்து பீர் வெள்ளத்தை ஓட விடும் முயற்சிகளைக் கைவிட வேண்டும். மாறாக, தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டையும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வையும் போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x