Published : 30 Apr 2024 11:58 AM
Last Updated : 30 Apr 2024 11:58 AM
சென்னை: மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு இபிஎஸ், ரா.முத்தரசன், ராமதாஸ் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இபிஎஸ்: உழைக்கும் கரங்களின் ஒற்றுமையை உணர்த்தி, உழைப்பின் பெருமையை உலகுக்கு பறை சாற்றும் தொழிலாளர் தினமாகிய மே தினத் திருநாளில், தொழிலாளர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த மே தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். உழைப்பில் தான் உடல் உறுதி பெறும்.
உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும். நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம் என்பதைத் தெரிவித்துக்கொண்டு, அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ‘மே தின’ நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
ரா.முத்தரசன்: உலகத் தொழிலாளர் உரிமை தினமான மே தினம். உலகின் மிகப் பெரும் ஜனநாயக அமைப்புக்கான நாட்டின் தேர்தல் திருவிழாவுடன் இணைந்து வருகிறது.
விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை பெறும் உரிமையும், குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம் போன்ற உரிமைகளும் மறுக்கப்படுகின்றது. சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அழிக்கப்பட்டு நாட்டின் சுயசார்பு அலட்சியப் படுத்துப்படுகிறது. பன்னாட்டு நிதி மூலதனத்தோடு இணைந்து கொண்டு, போராடிப் பெற்ற தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. புதிய வழிமுறையில் இரக்கமற்ற உழைப்புச் சுரண்டல் அனுமதிக்கப்படுகிறது.
எந்தச் சூழலிலும் வேற்றுமையில் ஒற்றுமை பேணி சேர்ந்து வாழும் பன்மைத்துவ சமூக அமைப்பை, மதத்தால், சாதியால் பிளவு படுத்தும் மதவெறி பாசிச சக்திகள் அதிகாரத்தில் நீடிப்பது பேராபத்து என்பதை வாழ்க்கை உணர்த்தும் படிப்பினையாகும்.
நாட்டின் ஜனநாயக அரசியல் அமைப்பையும், தேச விடுதலைப் போராட்ட வீரர்கள், அண்ணல் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கிய அரசியல் அமைப்பு சட்டத்தையும், நாட்டு மக்கள் நல்வாழ்வுக்கான கொள்கைகளையும் பாதுகாக்க வேண்டும் என்பது இந்த மேதினம் முன்வைத்துள்ள கடமையாகும்.
வகுப்புவாத, சனாதன பாசிச சக்திகளை அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற நாடாளுமன்ற தேர்தல் களம் வாய்பளித்துள்ளது.அதிபயங்கர ஏகாதிபத்திய சக்திகளை முறியடிப்போம். வகுப்புவாத, பாசிச சக்திகளை தோற்கடிப்போம்.
ராமதாஸ்: பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தவும், நினைவு கூறவும் ஏற்படுத்தப்பட்ட மே நாளை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா உலக அரங்கில் நிமிர்ந்து நிற்கிறது என்றால் அதற்கான முதுகெலும்பாக திகழ்பவர்கள் பாட்டாளிகள் தான். உலகின் ஆக்கும் சக்தி பாட்டாளிகள் தான். தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் இந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதற்கும் அவர்கள் தான் காரணம்.
பாட்டாளிகள் இல்லாவிட்டால் இந்த உலகம், இந்த மாநிலம் இயங்காது. ஆனால், இந்த உண்மைமை உணராமல் தொழிலாளர்களின் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் தமிழக அரசு பறித்துக் கொண்டிருக்கிறது. போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 100 மாதங்களுக்கு மேலாக அகவிலைப்படி உயர்வு கூட வழங்காமல் அவர்களின் வாழ்வாதாரத்தை உறிஞ்சுகிறது இந்த அரசு.
பாட்டாளிகளின் உரிமைகளை பறிப்பது ஆக்கப்பூர்வமான செயல் அல்ல. அது அனைத்துத் துறைகளின் வீழ்ச்சிக்கு தான் வழிவகுக்கும். அதை உணர்ந்து பாட்டாளிகளிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்க அரசு முன்வர வேண்டும். அதேபோல், உழைக்கும் மக்களுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகளும், அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். அவை அனைத்தையும் வென்றெடுக்க வேண்டும் என்று பாட்டாளிகளின் உரிமை மீட்டெடுக்கப்பட்டதைக் குறிக்கும் இந்நாளில் உறுதியேற்போம்.
அன்புமணி ராமதாஸ்: உலகம் உயர உயிரைக் கொடுத்து உழைக்கும் பாட்டாளிகளை போற்றும் மாற்றிய மே நாளைக் கொண்டாடும் பாட்டாளிகளுக்கு தொழிலாளர்கள் நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகத்தின் ஆக்கும் சக்திகள் என்றால் அவர்கள் தொழிலாளர்கள் தான். தேனீக்கள் எவ்வாறு காடுகள் தோறும், தோட்டங்கள் தோறும் சுற்றிச்சுழன்று தேனை சேகரித்து வந்து தேன் கூடுகளை அமைக்கின்றனவோ, அதே போல் தான் தொழிலாளர்கள் இந்த உலகின் முன்னேற்றத்திற்கு தேவையான அனைத்துக் கட்டமைப்புகளையும் உருவாக்கியுள்ளனர். உழைப்பாளர்கள் இல்லை என்றால் உலகம் இல்லை என்பது தான் உண்மை. அவர்கள் அனைத்து உரிமைகளும் வாழ வேண்டும் என்பதே எனது நோக்கம்.
இவ்வாறு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களின் மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT