Published : 30 Apr 2024 06:10 AM
Last Updated : 30 Apr 2024 06:10 AM
சென்னை: சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில், சட்டப்பேரவை தொகுதிவாரியாக அரங்குகள் அமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்.19-ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் வடசென்னை தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதி அளவில் வாக்கு எண்ணும் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் முன்னேற்பாட்டு பணிகளை ஆய்வு செய்தோம். வாக்கு எண்ணும் அரங்குகளில் 14 மேஜைகள், தேர்தல் நடத்தும் அலுவலர் மேஜை உட்பட 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் முறையாக நிறுவப்பட்டுள்ளதா, தபால் வாக்குகள் எண்ணுமிடத்தில் கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தோம்.
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தென் சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்தும், லயோலா கல்லூரியில் உள்ள மத்திய சென்னை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெறும் முன்னேற்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டோம். இதுதொடர்பான அறிக்கையை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவுக்கு அனுப்ப இருக்கிறோம். இவ்வாறு கூறினார்.
மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் செய்தியாளர்களிடம் கூறும்போது, வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 ஷிப்டுகளாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒரு ஷிப்டுக்கு 140 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 3 மையங்களிலும் பாதுகாப்பில் குறைபாடு என ஏதும் ஏற்படவில்லை என்றார்.
இந்த ஆய்வின்போது, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் வி.ஜெயசந்திர பானு ரெட்டி, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எம்.பி.அமித், கே.ஜெ.பிரவீன் குமார்,கட்டா ரவி தேஜா, கூடுதல் காவல்ஆணையர் கபில் குமார் சி.சரத்கர்,இணை காவல் ஆணையர் ஜி.தர்மராஜன், துணை காவல் ஆணையர் ராஜட் சதுர்வேதி ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT