Published : 29 Apr 2024 04:52 PM
Last Updated : 29 Apr 2024 04:52 PM
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் அமைந்திருக்கும் கோவிந்தராஜ பெருமாள் சந்நதிக்கு பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கை, கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்தில் கோவிந்தராஜ பெருமாள் சந்நதி உள்ளது. இந்த கோயிலில் மே 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை பிரம்மோற்சவம் நடத்த இந்துசமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், 400 ஆண்டுளாக இந்த கோயிலில் பிரம்மோற்சவம் ஏதும் நடத்தப்படவில்லை.
இதுவரை இல்லாத நடைமுறையை புதிதாக செயல்படுத்துகின்றனர். நடராஜர் தான் பிரதான தெய்வம் என்பதால், கோவிந்தராஜ பெருமாள் கோயிலுக்கு பிரம்மோற்சவம் நடத்த முடியாது. இந்துசமய அறநிலைய துறை தரப்பில், பக்தர்கள் விருப்பம் காரணமாக பிரம்மோற்சவம் நடத்தப்படுவதாக கோவிந்தராஜ பெருமாள் கோயில் அறங்காவலர்கள் தாக்கல் செய்திருக்கும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை கோயில்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT