Published : 29 Apr 2024 03:10 PM
Last Updated : 29 Apr 2024 03:10 PM
ஈரோடு: ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் ஒன்று பழுதடைந்த சம்பவம் குறித்து ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஈரோடு மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான ஈரோட்டை அடுத்த சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், கல்லூரி வளாகம் முழுவதும் மொத்தம் 221 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த ஒரு கண்காணிப்பு கேமரா, நேற்று இரவு பழுதடைந்தது. இது குறித்து தெரியவந்ததும் உடனடியாக பழுது நீக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா, சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து ஆட்சியர் கூறும்போது, “வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு கேமரா பழுது அடைந்தது தெரிய வந்ததும் ஒரு மணி நேரத்தில் அது சரி செய்யப்பட்டுவிட்டது. மின்னணுப் பொருட்களில் இவ்வாறு பழுது ஏற்படுவது சகஜம்தான். இதற்கு வெப்ப நிலை காரணமல்ல. சிசிடிவி கேமராவில் பதிவான ஃபுட்டேஜ், 3 மாதத்துக்கு பாதுகாப்புடன் வைத்திருக்கப்படும். தொடர்ந்து வளாகம் மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் உள்ளது” என்று தெரிவித்தார்.
இதனிடையே, ஈரோட்டில் நடந்த நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் இது குறித்து கேட்டபோது, “வாக்கு எண்ணும் இடத்தில் பொருத்தப்பட்ட கேமராக்களில் ஒரு கேமரா 26 நிமிடங்கள் பழுதடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT