Published : 29 Apr 2024 12:42 PM
Last Updated : 29 Apr 2024 12:42 PM
சென்னை: தமிழகத்தில் தலைதூக்கியிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலைச் சம்பவங்கள் - மாநிலத்தின் தலைநகரை கொலை நகராக மாற்றிக் கொண்டிருக்கும் தமிழக அரசின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற் குரியது. சென்னை ஆவடி அருகே நேற்று நள்ளிரவில் சித்த மருத்துவர் சிவம் நாயர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
சென்னை ஆர்.கே.நகரில் இளைஞர் சரமாரி வெட்டிக்கொலை, மீஞ்சூர் பஜார் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு, தண்டையார்பேட்டையில் அடையாளம் தெரியாத கும்பலால் ஒருவர் படுகொலை என தமிழகத்தின் தலைநகரமான சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர் கொலைச் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு நாள்தோறும் நடைபெறும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள், கள்ளச்சாராயம், போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு கலாச்சாரத்தால் அடிக்கடி ஏற்படும் குற்றச்சம்பவங்களால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அத்துறையை தன் சுய நலத்துக்காக மட்டும் பயன்படுத்தாமல் மக்களின் பொது நலனுக்காகவும் பயன்படுத்தி, குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இனியாவது விழித்துக் கொண்டு தமிழகத்தில் தலைதூக்கியிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் கூடுதல் கவனம் செலுத்துவதோடு, தன் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறைக்கு முழு சுதந்திரத்தை வழங்கி குற்றச் சம்பவங்கள் நிகழா வண்ணம் தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என தினகரன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT