Published : 29 Apr 2024 12:29 PM
Last Updated : 29 Apr 2024 12:29 PM
புதுடெல்லி: ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கை மே 6-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கு இன்று (திங்கள்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பதில் மனுவில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத் துறை சார்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
அமலாக்கத் துறை தரப்பில் நேற்றிரவு தான் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைக் குறிப்பிட்டு பேசிய செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், “அமலாக்கத் துறை இந்த வழக்கை வேண்டும் என்றே தாமதப்படுத்த முயற்சிக்கிறது. நாங்கள் வாதங்களை முன்வைக்க தயாராக இருக்கிறோம்.” என்று வாதிட்டார்.
பின்னர் கால தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்கு உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மன்னிப்பு கேட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “அமலாக்கத் துறை தாக்கல் செய்த பதில் மனுவை படிப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.” என்று உத்தரவிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், “கொடுக்கல், வாங்கல் விஷயத்தை பண மோசடி என்று கட்டமைக்கிறது அமலாக்கத் துறை. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி 320 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார். எனவே வழக்கை உடனே விசாரித்து செந்தில் பாலாஜிக்கான இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.
ஆனாலும், “வழக்கின் விசாரணையை மே 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 10 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT