Published : 16 Apr 2018 08:25 AM
Last Updated : 16 Apr 2018 08:25 AM

கோயம்பேடு சந்தையில் முறையாக திடக்கழிவு மேலாண்மை செய்யாவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்: தனியார் நிறுவனத்துக்கு ராஜேஷ் லக்கானி எச்சரிக்கை

கோயம்பேடு சந்தையில் முறையாக திடக்கழிவு மேலாண்மை செய்யாவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று தனியார் நிறுவனத்துக்கு சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகி யுள்ளது.

கோயம்பேடு சந்தை வளாகத்தில் மலர், காய்கறி, கனி என 3 மொத்த விற்பனை வளாகங்களில் 3,251 கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு உருவாகும் குப்பைகளை அகற்றி வளாகத்தை தூய்மையாகப் பராமரிக்கும் பணி ஒப்பந்தம், ராம்கி என்ற தனியார் நிறுவனத்துக்கு கடந்த 2010-ம் ஆண்டு வழங்கப்பட்டது. 2022-ம் ஆண்டு வரை இந்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் என கோயம்பேடு சந்தை நிர்வாக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு டன் குப்பையை அகற்ற கோயம்பேடு சந்தை நிர்வாகம் ரூ.960.80 வழங்க வேண்டும். அங்கு உருவாகும் குப்பையை திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி அழிக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு குப்பையில் இருந்து மின்சாரம் தயாரித்து மின்துறைக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருப்பதாக சிஎம்சிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் கோயம்பேடு சந்தை யில் பல ஆண்டுகளாக குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. வளாகமே, காய்கறி குப்பைகள், அழுகிய காய்கறிகள், பழங்கள் கொண்டதாகக் காட்சியளிக்கிறது. கடும் துர்நாற்றமும் வீசுகிறது. அங்கு தினமும் 200 டன் குப்பை உருவாகிறது. இதில் 20 டன் குப்பையிலிருந்து மட்டுமே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மீதம் உள்ள 180 டன் குப்பை லாரிகள் மூலமாக பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டப்படுகிறது. பல நேரங்களில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இயந்திரம் பழுதாகி, அதற்கான உதிரி பாகங்கள் வெளிநாட்டில் இருந்து வரவேண்டி இருந்ததால் பல மாதங்கள் இயங்கவில்லை. அப்போது அனைத்து குப்பைகளும் பெருங்குடியில் கொட்டப்பட்டு வந்தன.

குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் மையம் இயங்காததால், ரூ.1 கோடி வரை ராம்கி நிறுவனத்துக்கு கோயம்பேடு சந்தை நிர்வாகம் அபராதம் விதித்துள் ளது.

இந்நிலையில், சிஎம்டிஏ உறுப்பினர் செயலராக பொறுப்பேற்ற ராஜேஷ் லக்கானி, கோயம்பேடு சந்தை வளாகத்தை தூய்மையாகப் பராமரிப்பது தொடர்பான கூட்டத்தை கடந்த 10-ம் தேதி கூட்டியுள்ளார். அதில் தனியார் நிறுவனம் சார்பில் அதன் மேலாண் இயக்குநர்தான் பங்கேற்க வேண் டும் என்று அறிவுறுத்தினார்.

அந்தக் கூட்டம் தொடர்பாக சிஎம்சிஏ அதிகாரிகள் கூறியதாவது:

அந்தக் கூட்டத்தில், குப்பை யில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் மையம் காலை 10 மணிக்கு இயக்கத்தைத் தொடங்குவதற்கு பதிலாக காலை 7 மணிக்கே தொடங்க வேண்டும். பிற்காலத்தில் இரவிலும் இயங்க வேண்டியிருக்கும். இயந்திரம் பழுதானால் இயக்கம் பாதிக்காமல் இருக்க கூடுதல் இயந்திரம் வாங்க வேண்டும்.

மேலும் சந்தை வளாகத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் குப்பைகளை உரமாக்கும் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும். திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முறையாக கடைபிடிக்காவிட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று தனியார் நிறுவனத்துக்கு ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு செய்வதன் மூலம் மின்சாரம் தயாரிக்கவும், உரமாக்கவும் பல டன் குப்பைகள் தேவைப்படும். பெருங்குடிக்குச் செல்லும் குப்பையின் அளவு பெருமளவில் குறையும். அதன் காரணமாக குப்பையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, லாரிகளின் நடை குறைவதால் புகை மாசு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவை குறையும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x