Last Updated : 28 Apr, 2024 10:44 PM

 

Published : 28 Apr 2024 10:44 PM
Last Updated : 28 Apr 2024 10:44 PM

மே 5-ல் நடைபெறும் மாநாடு வணிகர்களுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும்: விக்கிரமராஜா நம்பிக்கை

திருப்பத்தூர்: மதுரையில் வரும் மே 5ஆம் தேதி நடைபெற உள்ள வணிகர் தின மாநில மாநாடு வணிகர்களுக்கு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தெரிவித்தார்

மறைந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் வேலூர் மண்டல தலைவர் ஆம்பூர் சி. கிருஷ்ணன் உருவப் பட திறப்பு விழா ஆம்பூரில் இன்று (ஏப்.28) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சி.கிருஷ்ணனின் உருவப் படத்தை திறந்து வைத்தார்.

இதையடுத்து, நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “மே 5-ம் தேதி 41வது வணிகர் தின மாநில மாநாடு மதுரையில் விடுதலை முழக்க மாநாடாக நடைபெற உள்ளது. வணிகர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள், வணிகர்கள் மீதான அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய மாநாடாக, விடுதலை முழக்க மாநாடாக நடைபெற உள்ளது.

வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ள வரிப்பிரச்சனைகள், ரவுடிகளால் தொல்லை, அதிகாரிகளால் தொல்லை ஆகியவற்றிலிருந்து வணிகர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டுமென்ற நோக்கில் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டிற்கு பிறகு வணிகர்களுக்கு ஓர் திருப்புமுனை ஏற்படும் என நம்புகிறோம்.

வரும் ஜூன் 4ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தாலும், ரூ.50,000க்கு மேல் ரொக்கம் கொண்டு செல்லக் கூடாது என்பதிலிருந்து வணிகர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகிகள் புதுதில்லியில் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து இது சம்பந்தமாக முறையிட்டு, ரொக்கம் கொண்டு செல்லும் பிரச்சனைக்கு தீர்வு காண இருக்கிறோம்.

ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்கொள்ள வர்த்தகர்கள் தயாராக இருக்கிறார்கள். அதே போன்று கார்ப்பரேட் கம்பெனியின் கடுமையான நெருக்கடியை எங்களது வணிகர்கள் தாக்குபிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். சங்கிலி தொடர் விற்பனையாளர்கள், உரிமையாளர்கள் தனி விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆகவே தான் 41வது மாநில மாநாட்டில் சாமானிய வணிகர்களை பாதுகாக்க சிறப்பு தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளது. அந்த தீர்மானத்தின் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் அதனை சட்டமாக்க வேண்டுமென கோரிக்கை வைப்போம்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், வணிகர் சங்க பேரமைப்பின் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் சி.கே. சுபாஷ், மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், பொருளாளர் செந்தில்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x