Published : 28 Apr 2024 06:45 PM
Last Updated : 28 Apr 2024 06:45 PM
சேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர், விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் மாணவரின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானமாக வழங்கினர். மாணவரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செய்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராயபாளையம் பழைய காலனியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பெரியசாமி- பரிமளா தம்பதியரின் 3-வது மகன் வினோத் (14), அங்குள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 24-ம் தேதியன்று, கொங்கராயபாளையத்தில், பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்தபோது, அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனம் மோதியதில், மாணவர் வினோத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, மாணவர் வினோத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி மாணவர் வினோத் சனிக்கிழமை மாலை உயிரிழந்தார். இதனால், அவரது பெற்றோர் கலங்கி தவித்த நிலையிலும், மாணவரின் உடலை தானமாக வழங்க முன்வந்தனர். இதையடுத்து, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.
ஆணையத்தின் உத்தரவின்பேரில், சென்னை, கோவை, மதுரையைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர், மூளைச்சாவு அடைந்துவிட்ட வினோத்தின் உடலில் இருந்து, இருதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவற்றை, பிறருக்கு பொருத்துவதற்காக அறுவை சிகிச்சை செய்து எடுத்தனர். இதனிடையே, உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், சேலம் அரசு மருத்துவமனையில், மாணவர் வினோத்தின் உடலுக்கு, மருத்துவமனை டீன் மணி மற்றும் மருத்துவர்கள் மாலை அணிவித்து, மரியாதை செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT