Published : 28 Apr 2024 08:55 AM
Last Updated : 28 Apr 2024 08:55 AM

சென்னை மாநகரில் செப்டம்பர் வரை குடிநீர் பிரச்சினை வராது: அதிகாரிகள் உறுதி

சென்னை: சென்னை மாநகர் பகுதிகளில் வரும் செப்டம்பர் மாதம் வரை குடிநீர் தேவையை சமாளிக்க முடியும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மார்ச், ஏப்ரல்மாதங்களில் வெப்பம் அதிகரிக்கும் போது, வெப்பச் சலனம் காரணமாக வழக்கமாக மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு மழை குறைவாகவே பெய்துள்ளது. வழக்கமாக மார்ச் 1 முதல் ஏப்.27 வரை தமிழகத்தில் சராசரியாக 54 மிமீ மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 9.4 மிமீ மழை மட்டுமே பெய்துள்ளது. இது வழக்கமான அளவை விட 83 சதவீதம் குறைவு. இந்த காலகட்டத்தில் சென்னை, செங்கல் பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை.

அதே நேரம் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக இந்தியவானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச் சந்திரன் கூறும்போது, ‘‘தற்போது பசிபிக் பெருங்கடல் பகுதியில் எல்நினோ நிலவுவதால் தமிழக பகுதியில் வெப்பம் அதிகமாக இருக்கும்.போதிய மேகங்கள் உருவாகாததால் மழை வாய்ப்பு குறைந்துள்ளது’’ என்றார்.

தமிழகத்தில் வெப்பம் அதிகரித்து வருவதால், சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் குறைந்து வருகிறது. தற்போது பூண்டி ஏரியில் 1,020 மில்லியன் கன அடி, சோழவரம் ஏரியில் 130 மில்லியன் கன அடி, புழல் ஏரியில் 2,930 மில்லியன் கன அடி, கண்ணன் கோட்டை - தேர்வாய் கண்டிகையில் 386 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கம் ஏரியில் 2,389 மில்லியன் கன அடிஎன மொத்தம் 6,855 மில்லியன் கன அடி நீர் இருப்பில் உள்ளது.வீராணம் ஏரி வறண்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே தேதியில் (ஏப்.27) மொத்தம் 8,263 மில்லியன் கனஅடியாக இருந்தது. இந்த ஆண்டு நீர் இருப்பு நேற்றைய நிலவரப்படி 1,408 மில்லியன் கனஅடி நீர் குறைவாக உள்ளது. இதனால் இந்த ஆண்டு கோடையை குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ? என பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தற்போது உள்ள நீர் இருப்பைக் கொண்டு செப்டம்பர் மாதம் வரை சென்னைக்கு குடிநீர் வழங்க முடியும்.மேலும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே மீஞ்சூர், நெம்மேலியில் தினமும் 210 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைத்து வரும் நிலையில், இந்த ஆண்டு நெம்மேலியில் புதிதாகப் பயன்பாட்டுக்கு வந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தினமும் 150 மி. லிட்டர் குடிநீர் கிடைத்து வருகிறது. எனவே இந்த ஆண்டு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x