Published : 28 Apr 2024 05:20 AM
Last Updated : 28 Apr 2024 05:20 AM

மிக்ஜாம் புயல், தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிவாரணம்: தமிழகத்துக்கு ரூ.682 கோடி நிதி

சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்காக தமிழகத்துக்கு மொத்தம் ரூ.682.67 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த டிச.3, 4-ம் தேதிகளில் மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அதேபோல், டிச.17, 18-ம் தேதிகளில் அதிகன மழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மிகக் கடுமையான பாதிப்புகளை சந்தித்தன.

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரிய நிவாரணத் தொகையை வழங்குவதாக உறுதியளித்தார். அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் பாதிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை மத்திய குழுவினரும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தலா ரூ.6,000: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.6,000 வீதம் நிவாரணம் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட தமிழக அரசு பொதுமக்களுக்கு தேவையான நிவாரண பொருட் களையும் வழங்கியது. இதற்காக, மாநில பேரிடர் நிவாரணத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதியில் இருப்பில் இருந்த ரூ.406.57 கோடியை தமிழக அரசு பயன்படுத்தியது.

ரூ.38 ஆயிரம் கோடி தேவை: இதைத் தொடர்ந்து, இந்த 2 இயற்கைப் பேரிடர் பாதிப்புகளுக்கு, மறுகட்டமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரூ.19,692.69 கோடியும் மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு ரூ.18,214.52 கோடியும் என மொத்தம் ரூ.37,907.21 கோடி நிவாரணத் தொகையை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நிவாரணத் தொகை வழங்குமாறு கோரிக்கை வைத்தார். திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் எம்.பி.க்கள் குழு டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழக அரசு கோரியுள்ள ரூ.37,907.21 கோடி நிவாரண தொகையை உடனடியாக வழங்குமாறு வலியுறுத்தினர்.

தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்க மறுப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். மேலும் தமிழகத்துக்கான நிதியை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இதற்கிடையே தமிழகத்துக்கு மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு ரூ.285.54 கோடியும், தென்மாவட்ட வெள்ள பாதிப்புக்கு ரூ.397.13 கோடியும் என மொத்தம் ரூ.682.67 கோடி நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, ஏற்கெனவே மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.406.57 கோடி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு ரூ.115.49 கோடியும், தென்மாவட்ட வெள்ள பாதிப்புக்கு ரூ.160.61 கோடியும் என மீதமுள்ள ரூ.276.10 கோடியை தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்துக்கு விடுவிப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், கர்நாடகா மாநிலத்தில் ஏற்பட்ட வறட்சிக்கு நிவாரணமாக ரூ.3,498.82 கோடி வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்திருந்தது. ஏற்கெனவே, அம்மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.44.60 கோடி வழங்கியுள்ள நிலையில், மீதமுள்ள ரூ.3,454.22 கோடியை விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியும் இல்லை, நீதியும் இல்லை: தமிழக அரசு சார்பில் ரூ.37,907 கோடி நிதி கோரப்பட்ட நிலையில், வெறும் ரூ.682.67 கோடி மட்டும் அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாக தமிழகம் கோரியது ரூ.37,907 கோடி ஆகும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை தமிழக அரசு ரூ.2,477 கோடியை செலவு செய்துள்ளது. ஆனால், மத்திய பாஜக அரசு தற்போது அறிவித்திருப்பது ரூ.276 கோடி மட்டும்தான்.

இதுவும் நாம் உச்ச நீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு நிதியும் கிடையாது. நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவில், தமிழக அரசு கோரிய ரூ.38 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x