Published : 28 Apr 2024 05:17 AM
Last Updated : 28 Apr 2024 05:17 AM

ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர் முகமது அசாருதீன் கைதானதால் குண்டுவெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டனர்: என்ஐஏ குற்றப்பத்திரிகையில் தகவல்

சென்னை: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரான முகமது அசாருதீன் கைது செய்யப்பட்டதைக் கண்டிக்கும் விதமாகவே கோவையில் குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்த ஐஎஸ்ஐஸ் அமைப்பினர் திட்டமிட்டு இருந்ததாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2022-ம் ஆண்டு அக்.23-ம்தேதி கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் முன்பாக காரில் கொண்டு செல்லப்பட்ட வெடிகுண்டுகள் வெடித்தன. இதில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளரான ஜமேஷா முபீன் என்பவர் உயிரிழந்தார். அதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி, வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இறந்த ஜமேஷா முபீன் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய ஆதரவாளரான உமர் பரூக்கின் நெருங்கியகூட்டாளியான கோவை போத்தனூர் திருமலைநகர் பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம் என்பவரின் மகனான தாஹா நசீரை என்ஐஏ அதிகாரிகள் கடந்தாண்டு நவம்பரில் கைது செய்தனர்.

14-வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள தாஹா நசீருக்கு எதிராக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கெனவே இரு குற்றப்பத்திரிகைகளை அதிகாரிகள் தாக்கல் செய்துள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது தாக்கல்செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையி கூறியிருப்பதாவது: கடந்த 2019-ம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கிய ஆதரவாளரான முகமது அசாருதீன் கைது செய்யப்பட்டதைக் கண்டிக்கும் விதமாகவே கோவையில் குண்டுவெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டதாகவும், இதற்காக உமர் பரூக் சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்ததாகவும், இதன்மூலம் நாட்டின் அமைதியை சீர்குலைத்து, ஒருமைப்பாட்டுக்கும், மதநல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைவிக்கும் நோக்கில் இந்த கும்பல் செயல்பட்டு வந்துள்ளது. இவ்வாறு அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x