Published : 28 Apr 2024 04:14 AM
Last Updated : 28 Apr 2024 04:14 AM

3 மாதங்களாக குடிநீர் வரல... காத்து தான் வருது... - புதூர் அருகே கிராம மக்கள் பாதிப்பு

புதூர் அருகே சங்கரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் குடிநீர் வராததால் தண்ணீர் பிடிக்க குடங்களுடன் வந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

கோவில்பட்டி: புதூர் அருகே குழாய் அமைத்து 3 மாதங்களை கடந்த நிலையில், குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் நல்லிகள் காட்சிப் பொருளாக உள்ளன. இதனால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதூர் வட்டாரத்தில் சுமார் 44 ஊராட்சிகள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை புதூர் வட்டாரத்தில் உள்ள 44 ஊராட்சிகளில் மழைக்காலங்களில் பெய்யும் மழைநீரை அந்தந்த கிராமத்தின் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள ஊருணியில் தேக்கி வைத்து, அதை ஆண்டு முழுவதும் குடிநீருக்காக பயன்படுத்தி வந்தனர். காலப் போக்கில் கிராமங்களில் நிலத்தடிநீர் மட்டம் வெகுவாக குறைந்து, கடல் நீர் உட்புகுந்ததால், புதூர் வட்டாரத்தில் அனைத்து பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளிலும் தண்ணீர் உவர்ப்பாக மாறி விட்டது.

இதனால், கடந்த 2005-ம் ஆண்டில் சீவலப்பேரி ஆற்றில் ராட்சத கிணறுகள் அமைத்து, அதில் இருந்து மோட்டார் மூலம் குழாய் வழியாக புதூர் வட்டாரம், விளாத்திகுளம், அருப்புக்கோட்டை வரை 239 கடலோர கிராமங்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் ஒரு சில கிராமங்கள் மட்டுமே முழு பலனை அடைந்து வருகின்றன. பல கிராமங்களில் நிலப்பரப்பு மேடு, பள்ளங்களுடன் இருப்பதால், குடிநீரை கடைக்கோடி கிராமங்கள் வரை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.

குடிநீர் வரவில்லை: புதூர் வட்டாரத்தில் உள்ள கந்தசாமிபுரம் ஊராட்சியில் புதுசின்னையாபுரம், பி.ஜெகவீரபுரம், சேர்வைக்காரன்பட்டி, சங்கரப்பநாயக்கன்பட்டி, கந்தசாமிபுரம் என 5 சிறிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கடந்த நிதியாண்டில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீடுகள் முன்பும் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன. சங்கரப்பநாயக்கன்பட்டி கிராமத்திலும் ஜல் ஜீவன் திட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டன. இணைப்பு வழங்கி 3 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக தற்போதும் கிராம மக்கள் அங்குள்ள கண்மாயில் உள்ள ஆழ்துளை கிணற்றில் அடிபம்பில் இருந்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் அ.வரதராஜன் கூறியதாவது: சங்கரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய்கள் பதித்து, நல்லிகள் அமைக்கப்பட்டதே தவிர தண்ணீர் எடுக்க ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் வீடுகள் முன்பு காட்சிப்பொருளாக குடிநீர் நல்லிகள் உள்ளன. கடந்த காலங்களில் குடிக்கவும், புழக்கத்துக்கும் தண்ணீர் கிடைக்காமல் தவித்த மக்கள், ஜல் ஜீவன் திட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், அந்த திட்டம் ஏட்டு சுரைக்காய் போல் ஆகிவிட்டது. எனவே, குடிநீருக்கான ஆதாரத்தை ஏற்படுத்தி, குழாய்கள் வழியாக தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x